1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy discussion about by election

இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா?!.. குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி!..

eps palanisamy
ஏற்கனவே 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 பாராளுமன்றத்தில் தேர்தல் என தொடர் தோல்விகளை சந்தித்த அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு சென்று எதிர்கட்சியாக கூட அமர முடியாத நிலையில் இருக்கிறது. பழனிச்சாமி தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தின் காரணமாக சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 24 எம்.எல்.ஏக்கள் தனியாக பிரிந்து தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர். மேலும் சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது அவருக்கு ஆதரவாகவும் அவர்கள் வாக்களித்தனர்..

இதையடுத்து அந்த 24 எம்.எல்.ஏக்களிடம் இருந்த முக்கிய பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த 24 எம்.எல்.ஏக்களில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமீபத்தில் தவெகவில் இணைந்தனர்.

இது பழனிச்சாமிக்கு கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதோடு மேலும் சில எம்.எல்.ஏக்கள் தவெக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. தற்போது முதல்வர் விஜய் வெற்றிபெற்ற திருச்சி கிழக்கு தொகுதி காலியாக இருக்கிறது. அதோடு நான்கு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டதால் மொத்தமாக அந்த 5 தொகுதிகளிலும் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 112ஆக உயர்த்த வேண்டும் என்கிற முடிவில் தவெக இருக்கிறது. ஒருபக்கம் இந்த தொகுதியில் வெற்றி பெற்று தங்கள் வலிமையை காட்ட வேண்டும் என்கிற முனைப்பில் திமுகவும் செயல்பட்டு வருகிறது.

ஆனால் இந்த தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கட்சி இரண்டாக பிளவு பட்டது, சில எம்,எல்,ஏக்கள் தவெகவுக்கு சென்றது, தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு சென்றது போன்ற காரணங்களால் அதிமுக நிர்வாகிகள் துவண்டு போயிருக்கிறார்கள். தற்போது இந்த 5 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தால் அதிமுகவுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் நிலை இருக்கிறது. எனவே தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விடலாமா என்கிற ஆலோசனையிலும் பழனிச்சாமி இருப்பதாக கூறப்படுகிறது.