முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது... காவல்துறை அதிரடி நடவடிக்கை...!
தமிழக முதல்வர் விஜய் அவர்களை தரக்குறைவாக பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட மார்க்கண்டேயன், முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்ததுடன், அவர் மீது கடுமையான மிரட்டல் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்களை எழுப்பியது.
இச்சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக மார்க்கண்டேயன் எம்எல்ஏ-வை கைது செய்தனர். இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர், கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திமுக எம்எல்ஏ ஒருவர் முதல்வரையே மிரட்டும் வகையில் பேசியதும், அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதும் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
Edited by Siva

