வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (11:16 IST)

அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ்!.. அடிபணிய மறுக்கும் திமுக!. நடப்பது என்ன?...

stalin rahul
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த பல தேர்தலாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது. அதேநேரம் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் திமுக பங்கு கொடுப்பதில்லை. அதாவது காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில்லை.

ஆனால் இப்போது எங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸில் பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பிரவீண் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்ட பலரும் இந்த கருத்தை வலியுறுத்துகிறார்கள். ஆனால் திமுகவுக்கு இதை விரும்பவில்லை. அதாவது மாநிலத்தில் சுயாட்சி.. மத்தியில் கூட்டாட்சி என்கிற தத்துவத்தைதான் திமுக தொடர்ந்து பின்பற்றி வருகிறது. எனவே காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கனிமொழி டெல்லி சென்றபோது கூட இதை ராகுல் காந்தியிடம் அதை கூறியதாக செய்திகள் வெளியானது..

ஒருபக்கம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் விஜயின் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என காங்கிரஸில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். விஜய் தனித்து நின்றாலே 18 சதவீத வாக்குகள் வாங்குவார் என சமீபத்தில் பிரவீன் சக்ரவர்த்தி கூறினார்.

காங்கிரஸ் தவெக பக்கம் சாய்வதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை என்கிறார்கள். மத்தியில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்பது நாம்தான்.. அடுத்த தேர்தலில் எப்படியாவது ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறோம்.. இப்படி எல்லா வகையிலும் ஆதரவாக நாம் இருக்கும் போது காங்கிரஸ் நம்மை விட்டுவிட்டு தவெக பக்கம் செல்ல நினைக்கிறது என ஸ்டாலின் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிகிறது.

எனவேதான் இதுவரை திமுக - காங்கிரஸிடையே தொகுதி பங்கீடு பற்றி பேச திமுக சார்பில் குழு அமைக்கப்படவில்லை.. கடந்த 70 நாட்களாக இதற்காக காத்திருக்கிறோம் என காங்கிரஸ் தரப்பு சொல்லியும் திமுக கண்டு கொள்ளவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் ராகுல் காந்தி அழுத்தம் கொடுத்தாலும் திமுக எந்த பதிலும் கொடுக்கவில்லை.. மேலும், வருகிற 22ஆம் தேதிக்கு பின்னரே தொகுதி பங்கீடு பற்றி பேசுவோம் என கட்சி அறிக்கை வாயிலாக பதில் சொல்லியிருக்கிறது திமுக.

இது காங்கிரஸ் தலைமைக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது
. எனவே திமுக - காங்கிரஸ் கூட்டணி எதை நோக்கிச் செல்கிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது..