கொளத்தூர் தொகுதி வாக்குகள் சரிபார்க்கும் பணி.. திடீரென புறக்கணித்த திமுக முகவர்கள்...!
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குகள் சரிபார்க்கும் பணியை திமுக முகவர்கள் திடீரெனப் புறக்கணித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகளைச் சரிபார்க்கும் பணி தொடங்கியது. தினமும் இரண்டு வாக்குச்சாவடிகள் வீதம் ஏழு நாட்கள் இந்தப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திமுக வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் இந்தப் பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென இந்தச் சரிபார்ப்புப் பணி தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர். தேர்தல் ஆணையத்தின் தரப்பில் திமுக எழுப்பிய அனைத்துச் சந்தேகங்களையும் விளக்கத் தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்த செயல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தோல்வி பயம் காரணமாகவோ அல்லது பொதுமக்களை திசைதிருப்பும் நோக்கத்திலோதான் திமுக தரப்பு வேண்டுமென்றே இந்த நாடகத்தை அரங்கேற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற ஆணையின்படி வெளிப்படையாக நடைபெறும் இந்தச் சரிபார்ப்புப் பணியை எதிர்கொள்ளத் திராணியின்றி திமுகவினர் ஓட்டம் பிடிப்பது அவர்களின் பலவீனத்தையே காட்டுவதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
