மதுரையில் 3 நாட்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்!.. அதிர்ச்சியில் மக்கள்..
ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் காரணமாக உலகெங்கும் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் கிடைப்பதில் பிரச்சனை இல்லையென்றாலும் ஹோட்டல்களுக்கு கொடுக்கப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஹோட்டல் வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது..
இன்று காலை மதுரையில் செய்தியாளரிடம் பேசிய தமிழக ஹோட்டல் உரிமையாளர் சங்க துணைத்தலைவர் இருக்கும் சிலிண்டரை வைத்து 2 நாட்கள் ஓட்ட முடியும். அதற்கு மேல் கிடைக்கவில்லை. மதுரையில் 500க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படும் நிலையில் 3 நாட்களில் ஹோட்டல்களை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மதுரையில் பெரும்பாலான ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர்களை நம்பித்தான் இயங்குகிறது.
மதுரையில் ஹோட்டல் தொழிலில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாலர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஹோட்டல்கள் மூடப்பட்டால் அவர்கள் பாதிக்கப்படுவதோடு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து மதுரை வந்தவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.
ஒருபக்கம், தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கும், வணிகர்களுக்கும் தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்வது பற்றியும், அதற்கான நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.