நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது.. சென்னை ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு..!
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி நடத்தி வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் ஆகிய இடங்களில் திரண்ட பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என முழக்கமிட்டனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு நூற்றுக்கணக்கான பெண் தூய்மை பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தை மாநகராட்சி கைவிட வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
நள்ளிரவிலும் போராட்டம் நீடித்ததால், அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் பணியாளர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran
