பகலில் குறையும் ... இரவில் மீண்டும் அதிகரிக்கும்! சென்னைக்கு பிரதீப் ஜான் கொடுத்த அலர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் , சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன், சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று பகல் நேரத்தில் மழையின் தீவிரம் குறையும் என்றும், இரவு நேரத்தில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எல்-நினோ தாக்க ஆய்வுக் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தற்போது மழை மேகங்கள் பொன்னேரி, பழவேற்காடு பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் , இதனால் சென்னையில் பகலில் வெயில் தலைகாட்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் நகரின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று இரவு முதல் நாளை காலை வரை சென்னையில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், நேற்று இரவு சென்னையில் பெய்த மழையைப் போன்ற தீவிரமான மழை இன்று இரவு இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

