மதுரை, கோவைக்கு மெட்ரோ தேவையில்லை.. பஸ் வசதியை அதிகப்படுத்தினால் போதும்.. மத்திய அரசு அறிவுரை...
சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு அனுப்பிய கோரிக்கையை மத்திய அரசு மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையில் மெட்ரோ சேவை வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில், அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் இதை கொண்டுவர திட்டமிடப்பட்டு விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை யானைமலை வரை சுமார் 32 கி.மீ தூரத்திற்கு 23 நிலையங்களுடன் சுமார் 11,360 கோடி ரூபாயில் மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. அதேபோல் கோவையில் அவிநாசி சாலை மற்றும் உக்கடம் வழித்தடங்களில் சுமார் 39 கி.மீ தூரத்திற்கு 32 நிலையங்களுடன் 10,740 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ இயக்க திட்டமிடப்பட்டு, தமிழக அரசும் அதற்கு ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது.
ஆனால், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த முடியும் என்ற விதிமுறையை சுட்டிக்காட்டிய மத்திய அரசு, இதற்கான ஆவணங்களை கேட்டு ஏற்கெனவே கோப்புகளை திருப்பி அனுப்பியிருந்தது. இந்த நிலையில், கடந்த மே மாதம் தமிழக அரசு மீண்டும் இதை பரிந்துரை செய்தபோதிலும், மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் அதை கண்டிப்பாக நிராகரித்துவிட்டது.
குறிப்பிட்ட அளவுக்கு அங்கே மக்கள் தொகை இல்லை என்றும், இந்த திட்டத்தால் பயண நேரம் பெரிதாக குறைய வாய்ப்பில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக பேருந்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி கொள்ளலாம் என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Edited by Siva

