1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk is against edppadi palanisamy bring his on

எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனுக்கு பதவி!.. அதிமுகவில் எதிர்ப்பு அலை!...

palanisamy
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு சென்று எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலையில் இருக்கிறது.இதனால்தான் சி.வி சண்முகம், எஸ்.பி வேலு மணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமியின் தலைமையின் கீழ் அதிருப்தி அடைந்து தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தார்கள். அதோடு அவர்களில் நான்கு பேர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டார்கள்..

பொதுக்குழுவைக் கூட்டி தோல்விக்கான காரணத்தை எடப்பாடி பழனிச்சாமி நிறுவனங்களுடன் விவாதிக்க வேண்டும் என்பது சிவி சண்முகத்தின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் தற்போது வரை பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டவில்லை. அதில் அவருக்கு விருப்பமில்லை என கருதப்படுகிறது.

ஒருபக்கம் பழனிச்சாமியின் மகன் மிதுனுக்கு அதிமுக ஐடி விங் அல்லது இளைஞர் அணியில் ஏதாவது பதவி கொடுக்க வேண்டும் என நேற்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு அதிமுகவிலேயே எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள கருத்தில் ‘அரசியலில் அல்லாதவர்களை கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து, கழகத்திற்கு எதிரான ஒரு நரேட்டிவ் செட் செய்யப்படுகிறது. அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது.

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள்,  எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள், அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம். இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்’ என பதிவிட்டிருக்கிறார்.

சமீபத்தில் சி.வி சண்முகமும் பழனிச்சாமியின் மகனை  அதிமுகவுக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்த நிலையில் தற்போது மேலும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
அடுத்த கட்டுரையில்
கும்மிடிபூண்டியில் 3 வயது குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமை என்ற தகவல் பொய்யானது.. கனிமொழி குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்..