சின்னத்திரை நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வீச்சு – 3 பேர் பிடிபட்டனர்!
தூத்துக்குடி அருகே சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை தீபாவின் தந்தை மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டித் தள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக முத்துராஜ், கார்த்தி மற்றும் இசக்கி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம், மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (70). இவரது மகள் தீபா, பிரபல சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலையில், புலவர் கணேசன் முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
கணேசன் தாக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த நபர் ஒருவர், தடுக்க முயன்றார். ஆனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும் அரிவாளால் தாக்கியது. இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், இந்தப் தாக்குதலுக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய முத்துராஜ், கார்த்தி, இசக்கி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும், தாக்குதலுக்கான முழுமையான பின்னணி குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
