நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், சட்டப்பேரவையில் 'அப்பா எங்கே, அப்பா எங்கே' என்று தேடினால் எப்படி தெரியும்? வீட்டுக்குச் சென்று அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார்? என்று சொல்வார் என்று அவதூறாக பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நயினார் நாகேந்திரனின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்றும், பெண்களை மதிப்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத விஷயம் என்றும் விமர்சித்துள்ளார்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல் அவர் பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை என்றும், அவர் மீது தமிழக அரசு உரிய சட்டப்படிக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தலைவர்களின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்கள் பொதுவெளியில் பெரும் அதிர்வுகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
Edited by Siva
