பைக் டாக்ஸி சேவைக்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்..
மாநில அரசுகள் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். பைக் டாக்ஸி மூலம் சுமார் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாக்பூர்-காம்ப்டி பகுதியில் சுரக்ஷா என்ற முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கட்கரி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் சுரங்க பணிகளில் ஈடுபடும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஆபத்து நிறைந்த பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, ஆலோசனை வழங்கப்படும் என்றார். ஓட்டுநர்களின் உடல்நலம், குறிப்பாக கண் பார்வை பரிசோதனை, சாலைப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பைக் டாக்ஸிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், போக்குவரத்து மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கட்கரி கேட்டுக்கொண்டார். குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு இது நல்ல வருமான வாய்ப்பாக அமையும் என்றார்.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு நெகட்டிவ் பாயின்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்த மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து விதிமீறும் ஓட்டுநர்களின் உரிமம் இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படும் வகையில் இந்த நடைமுறை இருக்கும்.
Edited by Siva
