200 பேர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆப்பிள் நிறுவனம்.. எல்லாம் ஏஐ தான் காரணம்..
ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், சிரி மற்றும் விஷன் ப்ரோ பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, ஆப்பிளின் மென்பொருள் பொறியியல் அமைப்பின் கீழ் செயல்படும் Intelligent Systems Experience குழுவில் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் சுமார் 100 பணியிடங்கள் விஷன் ப்ரோ பிரிவிலும், மேலும் 100-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் சிரி மற்றும் மென்பொருள் குழுக்களிலும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், புதிய AI தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மேம்படுத்தப்பட்ட சிரியை உருவாக்குவதில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்துகிறது.
நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில், பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக சில குழுக்களின் பணிகள் மறுசீரமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பணியிடங்கள் குறைக்கப்பட்டாலும், புதிய பொறுப்புகள் மற்றும் பணியிடங்களும் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில், விஷன் ப்ரோவுக்கான கேமிங் தொடர்பான குழுவின் செயல்பாடுகள் பெருமளவில் குறைக்கப்பட உள்ளதாகவும், இம்மாதிரியான immersive video உள்ளடக்க தயாரிப்பிலும் மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிக உற்பத்திச் செலவு மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்கள் காரணமாக விஷன் ப்ரோ பிரிவில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
Edited by Siva
