போனஸை கட் செய்த டிசிஎஸ் நிறுவனம்.. ஏஐ டெக்னாலஜி தாக்கமா?
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் நடுத்தர மற்றும் சீனியர் நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு போனஸ் ஏப்ரல்–ஜூன் காலாண்டில் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளில் இந்தப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 80 சதவீதம் வரை வழங்கப்பட்ட நிலையில், தற்போது சராசரியாக 60 முதல் 70 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் Operating Margin 24 சதவீதமாக இருந்தது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 1.3 சதவீத புள்ளிகள் குறைவாகும். மேலும், உலகளவில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன்களை உருவாக்குவதற்கான செலவுகளும் நிறுவனத்தின் லாப வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், நீண்டகால வளர்ச்சிக்கான முதலீடுகளை லாப வரம்பை மட்டும் கருத்தில் கொண்டு குறைக்கப்போவதில்லை என டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக AI துறையில் போட்டியை சமாளிக்க நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.
இதற்கிடையில், டிசிஎஸ் ஊழியர்களின் போனசுக்கு அலுவலக வருகையும் முக்கிய காரணியாக உள்ளது. 85 சதவீதத்துக்கும் மேல் அலுவலக வருகை உள்ளவர்களுக்கு முழு தொகையும், 75–85 சதவீதம் வருகைக்கு 75 சதவீதமும் வழங்கப்படுகிறது. 60 சதவீதத்துக்கும் குறைவான வருகை இருந்தால் இந்த காலாண்டு ஊதியம் கிடைக்காது.
Edited by Siva
