நள்ளிரவில் வெடித்த ஃபிரிட்ஜ்... தூக்கத்திலேயே தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் , நள்ளிரவில் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெலகாவி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சாவத் கள்ளி பகுதியில் வசித்து வந்த தாமோனே குடும்பத்தினர் தினக்கூலி மற்றும் தச்சுத் தொழில் செய்து வந்தனர். திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் விநாயகர் சிலை வைத்து விளக்குகளால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பண்டிகை கொண்டாட்டங்களை முடித்துவிட்டு நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஃபிரிட்ஜ் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் மளமளவென வீடு முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. வீடு ஒரு சிறிய ஷெட் போன்ற அமைப்பில் இருந்ததால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து வெளியே வர வழியின்றி தீ மற்றும் அடர்ந்த புகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஊர்வலங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நகரில் தீவிரமாக நடைபெற்று வந்ததால், ஃபிரிட்ஜ் வெடித்த பெரும் சத்தத்தை அக்கம் பக்கத்தினர் முதலில் பட்டாசு வெடிப்பதாகவே நினைத்தனர். ஆனால், சில நிமிடங்களிலேயே வீட்டில் இருந்து புகை மூட்டமும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்திலேயே கஜானன் தாமோனே (65), சாரதா தாமோனே (45), பாரதி தாமோனே (50) மற்றும் ரோஷன் தாமோனே (21) ஆகியோர் உயிரிழந்தனர்.
பயங்கர தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய பிரியா தாமோனே (28) மற்றும் கங்கா தாமோனே (25) ஆகிய இருவரை தீயணைப்புத் துறையினரும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மார்க்கெட் காவல் நிலைய போலீசாரும் தீயணைப்புப் படையினரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விநாயகர் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்ததா அல்லது கம்ப்ரசர் கோளாறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
