இனி புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் வந்துவிடும்.. அதுவும் 10 கிலோவில்.. சோதனை சேவை ஆரம்பம்...
பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ் என்ற புதிய இலகுரக மற்றும் துருப்பிடிக்காத எரிவாயு சிலிண்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 10 கிலோ மற்றும் 5 கிலோ எடையிலான வீட்டு உபயோக சிலிண்டர் சேவையை அந்நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ்.சாஹ்னே சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த நவீன சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், எரிவாயு இருப்பை எளிதாகக் கண்காணிக்கும் வசதியையும் வழங்குகின்றன. மேலும், முன்பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள்ளேயே விநியோகம் செய்யப்படும் சிறப்பு வசதியும், குறைந்த ஆவண நடைமுறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
முதல் கட்டமாக கோவை, புனே, குருகிராம் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சேவை, ஆகஸ்ட் மாதத்தில் 25 நகரங்களுக்கும், அக்டோபருக்குள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்காக செயலி அல்லது இணையதளம் மூலமாகப் புதிய இணைப்புகளைப் பெறவும், முன்பதிவு செய்யவும் முடியும். விரைவில் 75888 88824 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
Edited by Siva
