இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று நினைப்பவர்கள் உண்மையான இந்துக்கள் அல்ல: ஆர்.எஸ்.எஸ்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 'ஒரே உலகம் ஒரே மனிதநேயம்' என்ற மாநாட்டில், RSS தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்க கூடாது என்று நினைக்கும் எந்தவொரு இந்துவும் உண்மையான இந்துவாக இருக்க முடியாது. ஒருவர் தம்மை இந்து என்று அழைத்து கொள்ள விரும்பினால், அனைத்து மத பாதைகளும் ஒரே இலக்கைத்தான் அடைகின்றன என்பதையும், ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனிதர்களிடையே எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை" என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்துத்துவா என்பது நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டு அடையாளம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு சுயநல அரசியல் ஒருபோதும் தீர்வாகாது என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் உண்மையான வலிமை சமுதாய ஒற்றுமையிலும் மனிதநேயத்திலும்தான் அடங்கியுள்ளது என்றும் வலியுறுத்தினார்.
பல்வேறு கலாச்சாரங்களும் மத நம்பிக்கைகளும் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பதே இயற்கை நியதி என்றும், அதை மதித்து பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் மோகன் பகவத் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
Edited by Siva
