1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (16:23 IST)

மிஸ்ஸஸ் தமிழிசை.. நீங்க கற்றப் பரம்பரையா?.. தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை! கருணாஸ் தாடாலடி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ்க வேட்பாளர் தமிழிசையில் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள கூடாது என திமுக தெரிவித்த நிலையில், தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் “நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என பதிவிட்டார். 
 
இந்த பதிவிற்கு கடும் விமர்சனங்கள் வந்ததும் அந்த பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இருந்தும் தமிழிசை அனைவரும் விடுவதாய் இல்லை. இந்நிலையில் இது குறித்து எம்.எல்.ஏ. கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு, பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் வழக்கம் போல பாஜக எஜமான விசுவாசத் திமிரில் எதை பேசவேண்டும் எதை பேசக் கூடாது என்ற அடிப்படை அறிவை மறந்து தனது டிவிட்டரில் ”நாங்கள் கற்றப்பரம்பரை; குற்றப்பரம்பரை அல்ல” என பதிவிட்டுள்ளார். 
குற்றம்பரம்பரை என்ற சொற்றொடரின் வரலாறு தெரியுமா தமிழிசைக்கு, தமிழ்நாட்டில் கள்ளர், பிரமலை கள்ளர், முத்தரைய அம்பலக்காரர், வலையர் என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். 
 
அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற சாதிகளும் குற்றப் பரம்பரை பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன. அதன்படி 12 வயதை எட்டிய ஆண்கள் தினமும், காலையிலும் மாலையிலும் காவல் நிலையத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். 
குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்த மதுரை மாவட்ட பெருங்காம நல்லூர் மக்கள் மீது ஆங்கிலேயே அரசு 3.4.1920-ல் துப்பாக்கிச்ச்சுடு நடத்தியது. அதில் வீரத்தமிழ் மறத்தி மாயக்காள் உள்ளிட்ட 16 பேர் மரணமடைந்தனர்.
 
1929 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 19 கிராமங்களை சேர்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினரை இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது ஆங்கிலேய அரசு. அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தினார், 
 
முத்துராமலிங்கதேவர் இந்த சட்டத்திற்கு முக்குலத்தோர் சமுதாயத்தினர் யாரும் அடிபணிய வேண்டாம் என கோரிக்கையும் விடுத்தார். இதையடுத்து பெரும் போராட்டம் வெடிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக விலக்கிக் கொண்டது.
இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில் இருந்தே பல விவாதங்கள் நடந்தன. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தானாகவே இச்சட்டம் காலாவதியானது. இந்த வரலாற்றை தமிழிசை மறந்தது ஏன்? 
 
குற்றம்ப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து அதற்காகவே போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரமறவர்களின் மண்ணில் நின்று ஓட்டுக் கேட்கும் தமிழிசை, அவர்களின் ஈகத்தை - வரலாற்றை கொச்சைப்படுத்துவதின் நோக்கம் என்ன?
 
குற்றப்பரம்பரை என்பது அன்றைய ஆங்கிலேயே அரசு குறிப்பிட்ட மக்களை முடக்குவதற்காக பயன்படுத்திய ஒடுக்குமுறை சொல்லாடலே. அதை தன்னுடைய தொகுதியில் தேர்தலுக்காக, குறிப்பிட்ட சாதியினரை அவமானப்படுத்தும் விதமாக அச்சொல்லாடலை பயன்படுத்தியது ஏன்?
ஒன்றைமட்டும் தமிழிசை புரிந்து கொள்ளவேண்டும்! நாங்கள் குற்றப்பரம்பரை என்பது ஒரு புறம் இருக்கட்டும்! ஆனால் நீங்கள் தமிழர் உரிமைகளை மட்டுமின்றி; ஒட்டு மொத்த இந்தியாவையே அந்நியர்களுக்கு விற்ற பரம்பரை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்!
 
இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழிசையின் கற்றப் பரம்பரைக்கு தமிழர்களின் கற்பிதம் என்னவென்று தெரியும்; தெரியவைப்பார்கள் யார் கற்றப்பரம்பரை; யார் குற்றப்பரம்பரை என்று…! இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.எல்.ஏ.கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.