1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Bank Locker Swept Away in Nepal Flood Broken Open, Cash Worth Rs 58 Lakh Stolen

நேபாள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வங்கி லாக்கர்.. கிராம மக்கள் உடைத்து பங்கு போட்ட சம்பவம்..

nepal
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்திற்கு மத்தியில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட அந்த லாக்கர், தாடிங் மாவட்டத்தின் பெல்குகோலா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
 
ரசுவா பகுதியில் இருந்து திரிசூலி ஆற்றில் அடித்துவரப்பட்டதாக கூறப்படும் இந்த லாக்கரை, பாதுகாப்புப் படையினர் அங்கு செல்வதற்கு முன்பாக சில உள்ளூர் மக்கள் உடைத்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அதற்குள் இருந்த பணத்தை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் தொடர்பாக நேபாள போலீஸார் மற்றும் ஆயுத படையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். சோதனையில் சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 92 லட்சத்துக்கும் அதிகமான நேபாளி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.58 லட்சம் என கூறப்படுகிறது.
 
கைது செய்யப்பட்ட அனைவரும் தாடிங் மாவட்ட காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், லாக்கரில் உண்மையில் எவ்வளவு பணம் இருந்தது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
 
மேலும், அந்த வங்கி லாக்கர் எவ்வாறு அடித்துச் செல்லப்பட்டது, போலீஸார் வருவதற்கு முன்பு வேறு யாராவது பணத்தை எடுத்துச் சென்றார்களா என்பது குறித்தும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேரழிவு நேரத்திலும் நடந்த இந்த திருட்டு சம்பவம் நேபாளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய் தான் பிரதமர் வேட்பாளரா? உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன பதில்..