விராட் கோலி vs கௌதம் கம்பீர் மோதல்! யார் மேல் தப்பு? – வைரலாகும் வீடியோ!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, கௌதம் கம்பீர் மோதிக் கொண்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் இருதரப்பு ரசிகர்களும் தங்கள் அணிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் ரன்ரேட்டை லக்னோ கடுமையாக கட்டுப்படுத்தியதால் 126 ரன்களே ஆர்சிபி எடுத்தது.
ஆனால் அடுத்ததாக களமிறங்கிய லக்னோ 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களே எடுத்து படுதோல்வி அடைந்தது.
இதற்கு முன்னதாக ஏப்ரல் 10ம் தேதி பெங்களூரில் நடந்த போட்டியின்போதே இரு அணிகளுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது. முக்கியமாக லக்னோ அணியின் கௌதம் கம்பீருக்கும், ஆர்சிபியின் கோலிக்கும் இடையே நெடுநாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தபோது கோலியும், கம்பீரும் இதுபோல சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நடந்தது.
கடந்த மேட்ச்சியில் சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து ஆர்சிபி ரசிகர்களை நோக்கி கௌதம் கம்பீர் கை நீட்டி சைகை காட்டியது, நவீன் கோலியை முறைத்துக் கொண்டது என போன மேட்ச்சிலேயே இந்த மேட்ச் மோதலுக்கான நெருப்பு பற்றிக் கொண்டது எனவே கூற வேண்டும்.
இந்த நிலையில்தான் நேற்று நடந்த மேட்ச்சில் கோலியின் செயல்பாடு கம்பீரை ஆத்திரமூட்டியுள்ளது. ஹாட் கேப்டன் என பெயர் பெற்ற கோலி மைதானத்திற்குள் ஆக்ரோஷமான நடையுடன் செயல்படுவது இது புதிது அல்ல. ஆனால் ஆர்சிபி பந்து வீச்சாளர் சிராஜ் லக்னோ பேட்ஸ்மேன் நவீனை முறைத்துக் கொண்டது மேலும் மோதலுக்கான காரணத்தை தீவிரப்படுத்தியது.
ரீச்சுக்குள் பேட்டை வைத்திருந்த போதும் வேண்டுமென்றே ஸ்டம்பில் பந்தை உருட்டி அடித்து விட்டு சும்மா பண்ணேன் என்பது போல சிராஜ் ரியாக்ஷன் காட்டி சென்றது நவீனை கோபப்படுத்தி விட்டது. அதுமட்டுமல்லாமல் போட்டி முடிந்து கை கொடுத்து செல்லும்போது கோலி கையை நவீன் தட்டி விட்டு சத்தம் போட்டார். இது அடுத்தக்கட்டமாக கோலி, கம்பீர் இடையே மோதல் எழ காரணமானது.
ஆனால் இதுபற்றி கோலி ரசிகர்கள் பேசுகையில் மைதானத்திற்குள் போட்டிகள், மோதல்கள் சகஜம்தான். ஆனால் போட்டி முடிந்தால் அனைத்தையும் மறந்து செல்ல வேண்டும். கோலி போட்டி முடிந்தபின் எல்லாரிடமும் சகஜமாகதான் இருந்தார். ஆனால் நவீனும், கம்பீரும் போட்டியில் நடந்ததை பெர்சனலாக எடுத்துக் கொண்டு விட்டனர் என கூறுகின்றனர்.
ஆனால் லக்னோ ரசிகர்கள் போட்டியில் மோதல் இருக்கலாம்தான். ஆனால் மற்ற வீரர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏற்க தக்கதல்ல. அதற்கு எதிர்வினையாற்றிதான் கௌதம் கம்பீர் வாக்குவாதம் செய்தார் என கூறுகின்றனர்.
இருபக்கமும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து பேசி வரும் நிலையில் யார் செய்தது தவறு என நேற்றைய மேட்ச்சின் வீடியோவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் ரசிகர்கள்.