கப்பு முக்கியம் பிகிலு.. தீவிர எதிர்பார்ப்பில் சன் ரைஸர்ஸ், ஆர்சிபி போட்டி!
இன்றைய ஐபிஎல் தொடரின் எலிமினேசன் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன் ரைஸர்ஸ் அணியும் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டு சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக முடிந்த நிலையில் குவாலிஃபயர் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய எலிமினேட் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன் ரைஸர்ஸ் அணியும் மோத உள்ளன. இதில் வெல்லும் அணி டெல்லி கேப்பிட்டல்ஸுடன் விளையாட தகுதி பெறுவர்.
மூன்று ஆண்டுகள் கழித்து தீவிர முயற்சியால் ப்ளே ஆஃப் வரை வந்துள்ளது கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அவ்வபோது சிறப்பாக விளையாடும் ஆர்சிபி அணி இரண்டாம் சுற்றின் இறுதியில் தொடர்ந்து மும்பை, டெல்லி, ஹைதராபாத் என அனைத்து அணிகளிடமும் தோல்வியையே தழுவியது. இந்த அணிகளுடன்தான் தற்போது ஆர்சிபி மோத உள்ளது. பின்ச், படிக்கல், டி வில்லியர்ஸ், கோலி போன்ற பேட்டிங் ஜாம்பவான்களை நம்பியே ஆர்சிபி உள்ள நிலையிலும் 200க்கும் அதிகமான இலக்குகளுக்கு ஆர்சிபி தடுமாற்றம் காண்கிறது.
தற்போது ப்ளே ஆஃபில் உள்ள மூன்று அணிகளையுமே தோற்கடித்துதான் சன் ரைஸர்ஸ் அணி ப்ளே ஆப் தகுதியே பெற்றது என்பதால் சன் ரைஸர்ஸின் ஆட்டம் வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதற்கொண்டு வார்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் அணி ப்ளே ஆஃப் வரை வந்துள்ளது. எனினும் கோப்பை வெல்வது சன் ரைஸர்ஸுக்குமே கனவாக இருந்து வருவதால் இந்த இரு அணிகளுக்குமான மோதல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.