புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2024 (10:51 IST)

அணியின் நன்மைக்காக விளையாடுபவர்களே வேண்டும்… ராகுலை சீண்டிய லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன. மும்பை அணியை விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். தோனி சென்னை அணிக்காக அன்கேப்ட் ப்ளேயராக எடுக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட கேப்டன்கள் அணிகளால் கைவிடப்பட்டுள்ளனர்.

இதில் கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டுள்ளது முக்கியக் கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் ஒரு போட்டி முடிந்த போது கே எல் ராகுலை, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடுமையாக பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் அதன் பின்னர் ராகுலை சந்தித்து சஞ்சீவ் கோயங்கா பேசியதால் இருவரும் சமாதானம் ஆகியதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது லக்னோ அணியில் ராகுல் எடுக்கப்படாதது குறித்து பேசியுள்ள சஞ்சீவ் கோயங்கா “நாங்கள் எப்படிப்பட்ட வீரர்களை அணியில் எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டோம் என்றால் தங்கள் தனிப்பட்ட லாபத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடும் தன்னலமற்ற வீரர்களைதான்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கமெண்ட் கே எல் ராகுலை மறைமுகமாக சீண்டும் விதமாக உள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.