1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (08:55 IST)

என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள காரணம் இதுதான்… ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து!

ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற புதிய விதிகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

இதையடுத்து நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன. மும்பை அணியை விட்டு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா, அந்த அணியிலேயே தக்கவைக்கப்பட்டார். மேலும் அவர் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஆகியோரை விட குறைவான தொகைக்கு அணியில் இருக்க சம்மதித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரோஹித் “நான் டி 20 வடிவில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். அதனால் அந்த பார்மட்டில் இப்போது இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதனால் நான் சரியான தொகைக்கு தக்கவைக்கப் பட்டுள்ளதாகவே நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.