ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வந்தன.
இந்நிலையில் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.
வீரர்களை ரிடென்ஷன் மற்றும் RTM ஆகிய முறைகளில் அணிகள் தக்கவைக்கலாம். ஒரு அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே ரிடென்ஷன் முறையில் தக்கவைக்கிறது என்றால் ஏலத்தில் 5 வீரர்களை RTM முறையில் தக்கவைக்கலாம். ஏலத்தில் பங்கேற்ற வீரர்கள் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக தொடரில் இருந்து விலகினால், தடைவிதிக்கப்பட்டு, அதற்கடுத்த ஏலத்தில் பங்கேற்க முடியாது.