திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (08:28 IST)

இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. இறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி!

நேற்றைய ஐபிஎல் தகுதி சுற்று போட்டியில் சன்ரைஸர் அணியை வீழ்த்திய டெல்லி அணி முதன்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதி போட்டி தகுதிக்கான ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களில் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ்  வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷிகர் தவன், ஹெட்மயர் போன்றோரின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 20 ஓவர்களில் 189 ரன்கள் பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ். பின்னர் சேஸிங்கில் இறங்கிய சன் ரைஸர்ஸ் அணி பவர் ப்ளே முடியும் முன்னரே முக்கியமான 3 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. 2வது ஓவரிலேயே வார்னர் விக்கெட் விழ. தொடர்ந்து 5வது ஓவருக்குள் கார்க், பாண்டே விக்கெட்டுகளும் சரிந்தன. கேன் வில்லியம்சன் நின்று காட்டிய அதிரடியில் சேஸிங் இலக்கை மெல்ல எட்டி பிடிக்க சன் ரைஸர்ஸ் முயன்ற தருணத்தில் வில்லியம்சன், ஹொல்டர் விக்கெட்டுகளும் விழுந்தன. 19வது ஓவரில் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் 3 விக்கெட்டுகள் விழுந்தன.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களுடன் தோல்வியை தழுவியது சன் ரைஸர்ஸ் அணி. இதன்மூலம் 13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.