வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 29 மே 2022 (00:07 IST)

குரங்கு அம்மை வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து பரப்பப்பட்டதா? - வதந்திகளின் பின்னால் உள்ள உண்மை என்ன?

monkey virus
குரங்கு அம்மை குறித்த கேலி மீம்கள், நகைச்சுவைகள் இணைய உலகில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன
 
ஐரோப்பாவில் குரங்கு அம்மை வெளிவரத் தொடங்கியதிலிருந்து, அத்தொற்று குறித்த நம்பிக்கைகள், ஐரோப்பிய நாடுகளின் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த நம்பிக்கைகள், கொரோனா தொற்றுநோயிலிருந்து நேரடியாக மறுசுழற்சி செய்யப்பட்டதாக தோன்றும் வகையில் உள்ளன.
 
'குரங்கு அம்மை ஊரடங்கு'க்கான திட்டம் இல்லை
 
குரங்கு அம்மை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது, டிக்டாக் பயனர்களிடையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படும் கருத்தாக உள்ளது. பயனர் ஒருவர், "குரங்கு அம்மை ஊரடங்குகள்", "குரங்கு அம்மை கொடுமை"க்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு பின்தொடர்பவர்களுக்கு டிக்டாக் வாயிலாக தெரிவித்துள்ளார்.
 
பிரிட்டனில் கொரோனா ஊரடங்கின்போது அரசாங்கத்தின் ஊடக சந்திப்புகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையிலான மற்ற பதிவுகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அப்பதிவுகளில் பிரிட்டன் அரசாங்கம் கொரோனா தொற்றின் போது பயன்படுத்திய அதே முழக்கங்கள், குரங்கு அம்மையை குறிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.
 
 
 
குரங்கு அம்மை குறித்த சமூக ஊடக பதிவுகள்
குரங்கு அம்மை தொற்று குறித்த அச்சங்கள் புரிந்துகொள்ளக்கூடியது என்றாலும், அத்தொற்று கொரோனா போன்றது அல்ல என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மேலும், குரங்கு அம்மை தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதே, நிபுணர்களின் பரவலான கருத்தாக உள்ளது.
 
 
கொரோனா தொற்றை கடந்து செல்வது எளிதானது அல்ல. அத்தொற்றை எதிர்கொள்ள தேவையான தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் ஏற்கெனவே நம்மிடம் உள்ளன. அறிகுறிகள் தென்பட்ட பின்னர் மட்டுமே தொற்று நோயாக கொரோனா கண்டறியப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்படுபவர்களை கண்டறிவதையும் அவர்களை தனிமைப்படுத்துவதையும் இது எளிதாக்குகிறது.
 
எனவே, ஊரடங்குகள் அல்லது பெருந்திரளாக தடுப்பூசி செலுத்துவது போன்றவை "இதற்கு எதிர்வினையாற்ற சரியான வழியாக இருக்காது," என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேன்டமிக் சயின்சஸ் சென்டரின் இயக்குனர் பேராசிரியர் பீட்டர் ஹோர்பி தெரிவிக்கிறார்.
 
அதற்கு பதிலாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களை இலக்காகக்கொண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
 
உலக சுகாதார மையம் சார்பாக பேசிய டாக்டர் ரோசமுண்ட் லூவிஸ், பெருந்திரளாக தடுப்பூசி செலுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை என தெரிவித்தார். மேலும், எந்தவித பயண கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது.
 
ஆய்வுக்கூடத்திலிருந்து பரவியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை
 
யுக்ரேன், ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சமூக ஊடக கணக்குகள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகியவற்றில், குரங்கு அம்மை ஆய்வுக்கூடத்திலிருந்து பரவியது என்றும் குரங்கு அம்மை உயிரி ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றன.
 
எனினும், ஒரு வைரஸ் எங்கிருந்து வருகிறது என்பதை அதன் டிஎன்ஏ வரிசைப்படுத்துவதன் மூலம் கண்டறிய முடியும். மரபியல் நிபுணர் ஃபாத்திமா டோக்மஃப்ஷான், இதனை பார்சல் ஒன்றில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து "[அது] கடந்து வந்த வெவ்வேறு பாதைகளை கண்டறிவதுடன்" ஒப்பிடுகிறார்.
 
வைரஸுக்கு இதுவரை நம்மிடம் உள்ள மரபணு வரிசைகள் அனைத்தும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொதுவாக பரவும் குரங்கு அம்மை திரிபின் தடத்திலிருந்து வந்ததாக உள்ளது. இது, "குரங்கு அம்மை ஆய்வகத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதை நமக்கு கூறுகிறது" என அவர் தெரிவித்தார்.
 
குரங்கு அம்மை
 
குரங்கு அம்மை தொற்று பாதிப்பின் வெவ்வேறு படிநிலைகள்
 
பிரிட்டனில் 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் சிறியளவில் குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டது. மேலும், 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெரிதளவில் குரங்கு அம்மை பரவல் ஏற்பட்டது. இந்த தொற்று அனைத்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மனிதர்கள் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகளால் ஏற்பட்டவையாகும்.
 
"எனவே, இப்போதும் இந்த காரணங்களாலேயே குரங்கு அம்மை ஏற்படுகிறது என்பது முற்றிலும் நம்பத்தகுந்ததாகும்," என்கிறார் பேராசிரியர் ஹோர்பி.
 
பிரிட்டனில் தற்போது ஏற்பட்டிருக்கும் குரங்கு அம்மை பரவலில் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட நபர், நைஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டவர்.
 
ஆய்வுக்கூடத்திலிருந்து குரங்கு அம்மை பரப்பப்பட்டது என்ற கூற்றுக்கு, "எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை" என பேராசிரியர் ஹோர்பி தெரிவித்துள்ளார்.
 
திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை
 
தற்போது ஏற்பட்டுள்ள குரங்கு அம்மை வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் இணைய உலகில் கருத்துகள் உலாவருகின்றன. கொரோனா 'சதித்திட்டங்களின்' எதிரொலியாக பலரும் இதற்கு பில் கேட்ஸ் அல்லது அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானி ஆன்டனி ஃபவுசியை நோக்கி விரல் நீட்டுகின்றனர்.
 
இந்த ஆதாரமற்ற கூற்று, ரஷ்ய ஊடகங்கள், சீன சமூக ஊடக ஆப் வீபோ மற்றும் இன்ஸ்டாகிராமில் பரப்பப்படுகிறது. ஃபேஸ்புக்கில் இந்த கூற்றை ரோமானிய, ஆங்கிலம், அரேபிக், பிரெஞ்சு, ஸ்லொவேனியா, ஹங்கேரி, பஞ்சாபி மொழிகளில் காணலாம்.
 
அமெரிக்காவில் செயல்பட்டுவரும் உயிரிபாதுகாப்பு அமைப்பான என்.டி.ஐ எனப்படும் நியூக்ளியர் த்ரெட் இனிஷியேட்டிவ் தயாரித்த ஆவணம் ஒன்றை இந்த கூற்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
 
எதிர்காலத்தில் ஏற்பட சாத்தியமுள்ள தொற்றுநோய்களை எதிர்கொள்ள திட்டமிடுவதற்கு, கடந்த 2021ஆம் ஆண்டில் என்.டி.ஐ உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிபட்டறை ஒன்றை நடத்தியது.
 
இதில் பங்கேற்றவர்கள் ஒரு கற்பனைக் காட்சியின் அடிப்படையில் வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்த கற்பனை காட்சி என்னவென்றால், "குரங்கு அம்மையின் அசாதாரண திரிபு கொடிய அளவில், உலகளாவிய தொற்றுநோயாக பரவுகிறது" என்பதுதான்.
 
"குரங்கு அம்மையின் ஆபத்துகள் பல ஆண்டுகளாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன" என்பது என்.டி.ஐயின் கூற்று. குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்த பயிற்சி பட்டறையின் கற்பனை காட்சியாக குரங்கு அம்மை வைரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது தெளிவான தேர்வாக உள்ளது.
 
தொற்றுநோய் பரவல் என்பது வாழ்க்கையின் உண்மை. எனவே ஒரு அமைப்பு அதனை முன்பே கணித்து, அதனை எதிர்கொள்ள திட்டமிடுவது என்பது சந்தேகத்திற்குரியது அல்ல.
 
கொரோனா தடுப்பூசியுடன் தொடர்புடையது அல்ல
 
இந்த கூற்று இரு வடிவங்களை எடுத்துள்ளது. சிம்பான்சிகளிடமிருந்து எடுக்கப்பட்ட வைரஸை மாற்றியமைத்து அதிலிருந்து ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசி தயாரிக்கப்படுத்துவதால், அந்த வைரஸ் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால், இதனை பிரதியெடுக்கவோ அல்லது பரப்பவோ முடியாது.
 
குரங்கு அம்மை
மேலே உள்ளதைப் போன்ற சமூக ஊடகப் பதிவுகள், சிம்பான்ஸி வைரஸுக்கும் குரங்கு அம்மைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறுகின்றன.
 
இருப்பினும், குரங்கு அம்மை ஆஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியில் காணப்பட்ட வைரஸிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகை வைரஸால் ஏற்படுகிறது - உண்மையில் இது பெரும்பாலும் (எலிகள் போன்ற) கொறித்துண்ணிகளில் காணப்படுகிறது, குரங்குகளில் அல்ல.
 
இணையத்தில் பரவும் இரண்டாவது கூற்று என்னவென்றால், கோவிட் தடுப்பூசி நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கி, மற்ற நோய்த்தொற்றுகளுக்கு பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது என்பது.
 
உண்மையில் இந்த கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தடுப்பூசிகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மட்டுப்படுத்தாமல் அதனை தூண்டி, ஒரு குறிப்பிட்ட தொற்றுநோயை எதிர்ப்பதில் மிகவும் பயனுள்ளதாக செயல்படுகிறது.
 
தடுப்பூசிகள் காரணமாக ஆன்டிபாடிகளால் ஏற்படும் (அஸ்ட்ராஜெனெகாவுக்குப் பிறகு ஏற்பட்ட அரிதான ரத்தக் கட்டிகள்) நோய்கள் சிறிதளவில் ஏற்பட்டிருந்தாலும், தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்குவதாகவோ அல்லது மற்ற நோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் திறனை மாற்றியமைப்பதாகவோ கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.