புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (12:01 IST)

சீன ஆய்வக கொரோனா கசிவு கோட்பாட்டை ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்?

சீனாவின் வுஹான் நகரில் கோவிட் -19 முதன்முதலில் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும், ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் முதலில் எங்கே, எப்படி தோன்றியது?
 
இந்த வைரஸ் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக முன்னர் கூறப்பட்டது. பலரும் இதை ஒரு சதி என்றும் இதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறினர்.
 
ஆனால் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்ற இந்த சர்ச்சைக்குரிய கூற்று இப்போது மீண்டும் வலு பெற்றுள்ளது.
 
இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என்ற விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது சீனாவில் உள்ள வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்ததா அல்லது வேறு எங்கிருந்தாவது வந்ததா என்பது குறித்த விசாரணை அறிக்கையை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸின் மூலம் குறித்த தியரி என்ன? இந்த விவாதம் ஏன் முக்கியமானது ?
 
வுஹான் ஆய்வக-கசிவு என்றால் என்ன?
 
கொரோனா வைரஸ் மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து தற்செயலாக கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது நிலவுகிறது.
 
இந்த வைரஸ் முதன்முதலில் வுஹானில் கண்டறியப்பட்டது. அங்கு சீனாவின் பெரிய உயிரியல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் உள்ளது என கசிவு கோட்பாட்டின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆப் வைராலஜி என்ற இந்த நிறுவனத்தில், வெளவால்களில் கொரோனா வைரஸ் இருப்பது குறித்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆராய்ச்சி நடந்து வருகிறது. வுஹானின் இந்த ஆய்வகம், வுஹான் கடல் உயிரின சந்தையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சந்தையில்தான் நோய்த்தொற்றின் முதல் தொகுதி வெளிப்பட்டது.
 
கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்து இந்த சந்தையில் பரவியிருக்கலாம் என்று வைரஸ் கசிவு தியரியை ஆதரிப்பவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இது விலங்குகளிலிருந்து வந்த வைரஸ் என்றும் இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் பலர் கூறுகிறார்கள்.
 
இந்த சர்ச்சைக்குரிய தியரி கொரோனா பெருந்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் தோன்றியது . அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு ஆதரவு தெரிவித்தார். ஒரு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் பொருட்டு கொரோனா வைரஸ் மாற்றியமைக்கப்பட்டு இருக்கக்கூடும் என்று பலர் கூறினர்.
 
அந்த நேரத்தில் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் இதை ஒரு சூழ்ச்சியாக கருதினார்கள். ஆனால் இது ஆராயப்பட வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் சமீபத்திய வாரங்களில் இந்த கசிவு தியரி மீண்டும் சூடுபிடித்துள்ளது.
 
இதற்கு காரணம் என்ன?
அமெரிக்க ஊடகங்களில் வெளியான இது தொடர்பான சமீபத்திய அறிக்கைகள் ,ஆய்வக-கசிவு கோட்பாடு குறித்து மீண்டும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.
 
ஆய்வக கசிவு கோட்பாட்டை முன்பு அவ்வளவாக நம்பாத விஞ்ஞானிகளும், அதை சந்தேகிப்பவர்களும் இப்போது அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
 
கொரோனா வைரஸ் தொற்று அந்த நகரின் மக்களிடையே பரவ ஆரம்பித்ததற்கு முன்பாகவே, வுஹானின் ஆய்வகத்தில் பணிபுரியும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என கூறும் அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய அறிக்கை இந்த வாரம் அமெரிக்க ஊடகங்களில் வெளியானது.
 
டொனால்ட் டிரம்பின் அறிவுறுத்தலின் பேரில் அமெரிக்க வெளியுறவுத்துறை துவக்கியிருந்த ஆய்வக கசிவு தொடர்பான விசாரணையை தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிறுத்திவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.
 
"இந்த வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கும் சாத்தியகூறு உள்ளது. இது உண்மையில் நடந்ததா என்பதைக் கண்டுபிடிக்கும் முழு விசாரணைக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்," என டிரம்பின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி, அமெரிக்க செனட்டிடம் மே 11 ஆம் தேதி தெரிவித்தார்.
 
கோவிட் -19 வைரஸ் முதலில் எங்கிருந்து வந்தது, பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதா அல்லது தற்செயலாக ஒரு ஆய்வகத்தில் இருந்து கசிந்ததா என்பது குறித்த அறிக்கையை தான் பதவியேற்றதும் கேட்டதாக அதிபர் பைடன் இப்போது கூறுகிறார்.
 
டிரம்ப் செவ்வாயன்று நியூயார்க் போஸ்ட்டுக்கு அனுப்பியுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், வைரஸின் மூலம் குறித்த புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்திற்கு பைடன் பெயர் சம்பாதிக்கப் பார்க்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
"ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்தது என்பது எனக்கு முன்பே தெளிவாக இருந்தது, ஆனால் வழக்கம் போல் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். இப்போது எல்லோரும் டிரம்ப் சொல்வது சரிதான் என்று கூறுகிறார்கள்," என அவர் எழுதினார்.
 
விஞ்ஞானிகள் என்ன நினைக்கிறார்கள்?
 
இந்த விஷயம் குறித்து விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மர்மத்தை ஆழமாக விசாரிக்க நடந்த உலக சுகாதார அமைப்பின் விசாரணை, பதில்களை விட இன்னும் பல கேள்விகளையே எழுப்பியுள்ளதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
 
உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் வுஹானுக்கு சென்று பெருந்தொற்றின் மூலம் பற்றி விசாரித்தது.
 
இந்த குழு அங்கு 12 நாட்கள் தங்கி வுஹானின் ஆய்வகத்தையும் பார்வையிட்டது. இதன் பின்னர் அந்த விஞ்ஞானிகள் , ஆய்வக கசிவு கோட்பாடு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறிவிட்டனர்.
 
இப்போது இந்தக்குழுவின் கண்டுபிடிப்புகள் குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆய்வக கசிவு தியரியை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கையை, விஞ்ஞானிகளின் முக்கிய குழு கடுமையாக விமர்சித்துள்ளது.
 
WHO இன் பல நூறு பக்க அறிக்கையின் சில பக்கங்களிலேயே ஆய்வக கசிவு தியரி நிராகரிக்கப்பட்டது.
 
" போதுமான தரவுகள் கிடைக்கும் வரை, இந்த வைரஸ் இயற்கையாக அல்லது ஆய்வகத்திலிருந்து பரவியிருக்கலாம் என்ற இரண்டு கருத்துகளையும் நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்."என இந்த அறிக்கையை விமர்சித்த விஞ்ஞானிகள் அறிவியல் இதழில் எழுதியுள்ளனர்.
 
இதற்கிடையில், ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிவு தொடர்பான விஷயத்தை இன்னும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து அதிகரித்து வருகிறது.
 
WHO இன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதனம் கெப்ரேயஸஸ் கூட ஒரு புதிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். "அனைத்துமே சாத்தியம்தான். அவற்றை ஆராய வேண்டும்," என்று அவர் கூறினார்.
 
இப்போது டாக்டர் ஃபாசியும், இந்த வைரஸ் இயற்கையாகவே பரவியது என்று தான் நம்பவில்லை என்று கூறுகிறார். ஒரு வருடம் முன்பு அவரது அணுகுமுறை வேறுபட்டதாக இருந்தது. இந்த வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவியிருக்க வேண்டும் என்று அப்போது அவர் கருதினார்.
 
இந்த விஷயத்தில் சீனா என்ன சொல்கிறது?
கொரோனா வைரஸ் ஆய்வக கசிவு தொடர்பான அறிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது.
 
இது அவதூறு பிரச்சாரம் என்று சீனா கூறியுள்ளது. வேறொரு நாட்டிலிருந்து உணவை எடுத்து வந்த கப்பல்கள் மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று அது கூறுகிறது.
 
தொலைதூர சுரங்கங்களில் இருக்கும் வெளவால்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மீது சீனாவின் முன்னணி வைராலஜிஸ்ட் ஒருவர் நடத்திய புதிய ஆராய்ச்சியின் அறிக்கையை அந்த நாடு தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.
 
யுவான் ஆய்வக ஆராய்ச்சியாளரும், சீனாவின் 'பேட் வுமன்' என்று அழைக்கப்படும் வைராலஜிஸ்டுமான பேராசிரியர் ஜி ஜெங்லி கடந்த வாரம் ஒரு புதிய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
 
2015 ஆம் ஆண்டில், சீனாவில் ஒரு சுரங்கத்தில் இருக்கும் வெளவால்களில் எட்டு வகையான கொரோனா வைரஸை அவரது குழு அடையாளம் கண்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.
 
சுரங்கத்தில் அவரது குழு கண்டுபிடித்த கொரோனா வைரஸை விட, பாங்கோலின்களில் காணப்படும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.
 
அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய ஊடகங்கள் வதந்திகளை பரப்புவதாக சீன அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
 
கொரோனாவின் மூலத்தைப் பற்றிய கேள்வியில் அமெரிக்கா வெறி கொண்டிருக்கிறது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையின் தலையங்கம் கூறுகிறது.
 
மாறாக, சீனா மற்றொரு கோட்பாட்டை வலியுறுத்துகிறது. இந்த வைரஸ் சீனாவின் வேறு சில பகுதிகளிலிருந்தோ அல்லது தென்கிழக்கு ஆசிய நாட்டிலிருந்தோ உறைந்த இறைச்சி மூலம் வுஹானுக்கு வந்திருக்கலாம் என்று அது கூறுகிறது.
 
வைரஸின் மூலத்துடன் தொடர்புடைய மற்றொரு தியரி உள்ளதா?
ஆம், வைரஸைப் பற்றி மற்றொரு கோட்பாடு உள்ளது. இது 'இயற்கை தோற்றம்' கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது.
 
இதன்படி, இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து இயற்கையாகவே பரவுகிறது. எந்த விஞ்ஞானியும் அல்லது ஆய்வகமும் இதில் ஈடுபடவில்லை.
 
இந்தக் கோட்பாட்டின்படி கோவிட் -19 முதலில் வெளவால்களில் தோன்றியது. பின்னர் அதன் தொற்று மனிதர்களுக்கும் பரவியது. இது பெரும்பாலும் மற்ற விலங்குகள் அல்லது ' இடைப்பட்ட ஏதோ ஒன்றிடமிருந்து' பரவுகிறது.
 
WHO அறிக்கையும் இந்த கருத்தை ஆதரிக்கிறது. கோவிட் ஒரு இடைநிலை ஹோஸ்ட் மூலம் மனிதர்களுக்கு பரவியது என்ற கூற்று, 'சாத்தியம் முதல் மிகவும் சாத்தியம்' என்று அது கூறுகிறது.
 
தொற்றுநோயின் தொடக்கத்தில் இந்த கருத்து பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில், வெளவால்களிலோ அல்லது வேறு எந்த விலங்குகளிடமோ கோவிட் 19 மரபணு அமைப்புடன் ஒத்துப்போகும் எந்த ஒரு வைரஸையும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது 'இடைநிலை ஹோஸ்ட்' கோட்பாடு குறித்து சந்தேகங்களை எழுப்பியது.
 
நோய்த்தொற்றின் மூலத்தை அறிந்து கொள்வது ஏன் மிகவும் முக்கியமானது?
கோவிட் -19 உலகம் முழுவதும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 35 லட்சம் பேர் இறந்துள்ளனர். ஆகவே இது மீண்டும் நிகழாமல் தடுக்க, இந்த வைரஸ் எங்கிருந்து, எப்படி வந்தது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்,
 
சோனோடிக் கோட்பாடு' அதாவது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுநோய் பரவும் தியரி உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அது விவசாயம் மற்றும் வனவிலங்கு வேட்டை தொடர்பான நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
மிங்க் (சிறிய வன விலங்கு) வளர்ப்பிலிருந்து வைரஸ் பரவுகிறது என்ற பயத்தில் டென்மார்க்கில் மில்லியன் கணக்கான மிங்குகள் கொல்லப்பட்டன.
 
ஆனால் உறைந்த உணவு மூலம் பரவல் அல்லது ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிவு போன்றவை உண்மையாக மாறினால், அது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
கொரோனா வைரஸ் தொடர்பான முக்கியமான ஆரம்பத் தகவல்களை மறைத்த குற்றச்சாட்டுகளை சீனா ஏற்கனவே எதிர்கொண்டுள்ள நிலையில், ஆய்வக கசிவானது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், சீனாவைப் பற்றிய உலகின் பார்வையும் பெரிதும் மாறும்.
 
கூடவே சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மேலும் பதற்றமாகும்.
 
ஆரம்பம் முதலே சீனா உண்மைகளை பெரிய அளவில் மறைக்க முயற்சிக்கிறது என வாஷிங்டனை தளமாகக் கொண்ட அட்லாண்டிக் கவுன்சிலின் ஆராய்ச்சியாளர் ஜேமி மெட்ஸி, பிபிசியிடம், கூறினார்.
 
ஆய்வக - கசிவு கோட்பாடு குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என ஜேமி மெட்ஸி ஆரம்பத்தில் இருந்தே கோரி வருகிறார். "ஆய்வக-கசிவு கோட்பாடு தொடர்பான சான்றுகள் அதிகரித்து வருகின்றன. எனவே இதன் அடிப்படையில் ஒரு முழுமையான விசாரணையை நாம் கோர வேண்டும்" என்கிறார் அவர். ஆனால் சீனாவை சுட்டிக்காட்டுவதில் அவசரப்படக்கூடாது என்றும் சில வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
"இந்த விஷயத்தில் நாம் சிறிது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். கூடவே நயமாகவும் இருக்க வேண்டும். சீனாவின் உதவியின்றி, இதை செய்ய முடியாது. குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் இல்லாத சூழலை உருவாக்குவது அவசியம்," என சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் பேராசிரியர் டேல் பிஷ்ஷர், பிபிசியிடம் தெரிவித்தார்.