வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (00:36 IST)

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

Monkey Pox
உலகெங்கும் பதினோரு நாடுகளில் சுமார் 80 பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று உண்டாகி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம் இன்னும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
 
இதுமட்டுமல்லாமல் வெவ்வேறு நாடுகளில் உள்ள மேலும் 50 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.
 
முன்னதாக இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சமீபத்திய பரவலின்போது ஐரோப்பிய கண்டத்தில் முதல் முறையாக பிரிட்டனில்தான் உறுதியானது.
 
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொலைதூர பகுதிகளில் குரங்கம்மை பாதிப்பு மிகவும் சாதாரணமானது. குரங்கம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்று உண்டாவது மிகவும் அரிதானது.
 
 
 
இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு பெரும்பாலும் மிதமாகவே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வாரங்களிலேயே குணமடைந்து விடுவார்கள் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.
 
குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?
குரங்கம்மை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது; இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
குரங்கம்மை பாதிப்புக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி இதுவரை கிடையாது. பெரியம்மை தொற்றை உண்டாக்கும் வைரஸ் கிருமியை போன்றே குரங்கம்மையை உண்டாக்கும் வைரசும் இருப்பதால் பெரியம்மை தடுப்பூசியே குரங்கம்மை பாதிப்பில் இருந்து 85 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்கும்.
 
மேற்கு ஆப்பிரிக்க வகை மத்திய ஆப்பிரிக்க என்று குரங்கம்மை வைரஸ்களில் இரண்டு வகைகள் உள்ளன.
 
இந்த தொற்று பாதித்த மாணவர்களுக்கு ஆரம்பகட்டத்தில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகு வலி, தசை வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும்.
 
காய்ச்சல் ஏற்பட்டதும் தடிப்புகள் ஏற்படும். இவை பெரும்பாலும் முகத்தில் உண்டாகும். இந்த சிறிய தடிப்புகள் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும். பொதுவாக உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்த தடிப்புகள் வரும். கடைசியாக சிரங்கு போல உண்டாகி உதிர்ந்து விடும். இந்தக் காயங்களால் தோலில் தழும்பு ஏற்படும்.
 
14 முதல் 21 நாட்கள் வரை இந்தத் தொற்று, தாமாகவே சரியாகிவிடும்.
 
எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இது மரணங்களை உண்டாகியுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
 
குரங்கம்மை வைரஸ் எப்படி பரவும்?
 
ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் குரங்கம்மை நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
 
தோலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுக் குழாய் வழியாகவும், வாய், மூக்கு, மற்றும், கண்கள் வழியாகவும் மனித உடலுக்குள் குரங்கம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமி நுழையும்.
 
குரங்கம்மை பாலியல் ரீதியாகப் பரவும் நோய் என்று கூறப்பட்டதில்லை. ஆனால் இது உடலுறவின்போது ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்தாலே பரவக்கூடியது.
 
நோயால் பாதிக்கப்பட்ட குரங்கு, அணில், எலி போன்ற விலங்குகளுடன் தொடர்பில் இருக்கும்போதும், குரங்கம்மையை உண்டாக்கும் வைரஸ் கிருமி படிந்துள்ள படுக்கைகள் ஆடைகள் போன்றவை மூலமும் இக்கிருமி பரவுகிறது.