வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:18 IST)

நரேந்திர மோதி, அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும்படி பேசினாரா நெல்லை கண்ணன்?

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எதிராகப் பேசியதாக பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை கண்ணன் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகிவருகின்றன.
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி நடத்திய போராட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சாளரும், எழுத்தாளருமான நெல்லை கண்ணன், அமித் ஷா மற்றும் மோதியை தரக்குறைவாக பேசும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.
 
மேலும் இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் குறித்தும் சில கருத்துக்களையும் கூறி இருக்கிறார்.
 
நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சு, வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து, நெல்லை கண்ணனின் இந்தப் பேச்சிற்காக அவரைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக பா.ஜ.கவின் சார்பில் தமிழக காவல்துறை தலைவரிடம் திங்கட்கிழமையன்று புகார் அளிக்கப்பட்டது."தேசத்திற்கும் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும் வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும்" அந்தப் புகாரில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
 
இந்து அமைப்பு எதிர்த்ததால் 'சுல்தான்' படப்பிடிப்பு நிறுத்தம்
'தீண்டாமை சுவர்' விவகாரம்: 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாற திட்டம்
இந்நிலையில், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா நெல்லை கண்ணனை கைதுசெய்ய வேண்டுமென ட்விட்டரில் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார்.
 
"கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது" என்றும் "நெல்லை கண்ணனை எந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என இந்துக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்றும் கூறியுள்ள எச். ராஜா, நெல்லை கண்ணனின் தொலைபேசி எண்ணையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
 
புகைப்பட காப்புரிமை @HRajaBJP@HRAJABJP
இது குறித்து கருத்து பெற நெல்லை கண்ணனை தொடர்பு கொண்டோம். அவர் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறது காவல் துறை.
 
நெல்லை கண்ணன் வீட்டின் முன்பும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
 
நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி
நெல்லை கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்ல காவல்துறை அனுமதி மறுத்து வந்த நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனை செல்ல அனுமதிக்க வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
 
பின்னர் இன்று மதியம் நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.