1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (15:56 IST)

உலகப் பார்வை: இராக் தேர்தலில் மற்றொரு சர்ச்சை - தீயில் கருகிய வாக்குப் பெட்டிகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
 
இராக் தலைநகரம் பாக்தாத்தில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகள் எரிந்து நாசமாகின. கடந்த மாதம் நடந்த தேர்தலில், ஷியா முஸ்லிம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தேர்தலில் முறைகேடு நடந்தது என்ற சர்ச்சை எழுந்ததை அடுத்து, 10 மில்லியன் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய உள்துறை அமைச்சகம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறி உள்ளது. சில வாக்குப் பெட்டிகள்தான் தீக்கு இரையானதாகவும், பெரும்பாலானவை பாதுகாப்பாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியாத சூழ்நிலையில், இராக் பிரதமர் ஹைதர் அல் அபாதி, இதனை, 'இராக் மற்றும் அதன் ஜனநாயகத்தை சிதைக்கும் சதி' என்று கூறி உள்ளார்.
 
குடியேறிகளை அனுமதிக்க மறுக்கும் இத்தாலி
 
இத்தாலியின் புதிய உள்துறை அமைச்சர் 629 குடியேறிகள் கொண்ட கப்பலை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார். மாட்டயோ சல்வீனி, வலதுசாரி அரசியல்வாதி. தேர்தல் பிரசாரத்தின் போது, தங்கள் லீக் அணி வெற்றி பெற்றால், குடியேறிகள் விஷயத்தில் கடுமையாக நடப்போம் என்று உறுதி அளித்து இருந்தார். வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர் குடியேறிகள் விஷயத்தில் கடுமையாக நடந்து வருகிறார்.
 
பெரும் சுயாட்சிக்காக மனித சங்கிலி
 
வடக்கு ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி அதிகாரம் கொண்ட பாஸ்க் நாட்டில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் தன்னாட்சிக்கு அதிக அதிகாரம் கோரி மாபெரும் மனித சங்கிலியை அமைத்தனர். இந்த மனித சங்கிலியானது ஏறத்தாழ 202 கி.மீ நீண்டதாக இதனை ஒருங்கிணைத்தவர்கள் கூறுகிறார்கள். ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா விடுதலை கோருவது போல, பாஸ்க் பகுதியும் நீண்ட காலமாக கோரி வருகிறது.
 
சிங்கப்பூர் உச்சிமாநாடு: வட கொரியாவின் எதிர்பார்ப்பு என்ன?
 
செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிக்கவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் வரலாற்று சிறப்பு  வாய்ந்த இந்த சந்திப்பிற்காக கிம் ஜாங்-உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் வந்தடைந்தனர். ''ஒட்டுமொத்த உலகமும் இதனை உற்று கவனித்து கொண்டிருக்கிறது'' என இந்த சந்திப்பு குறித்து கிம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல  எதிர்பார்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.