ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (14:31 IST)

சிங்கப்பூர் உச்சிமாநாடு: அமெரிக்காவுடன் 'புதிய உறவை' எதிர்பார்க்கும் வட கொரியா

தனிமைபடுத்தப்பட்ட வட கொரியா, அமெரிக்காவுடன் புதிய உறவை ஏற்படுத்தும் சாத்தியத்தை அந்நாட்டின் அரசு ஊடக செய்தி உயர்த்தியுள்ளது.
வட கொரிய தலைவர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையே வரவாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை நடைபெற இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.
 
மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சந்திப்பிற்காக கிம் ஜாங்-உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் வந்தடைந்தனர்.
 
பல தசாப்தங்களாக அமெரிக்காவுடன் விரோத போக்கை கடைபிடித்து வந்த வட கொரியாவின் தொனியில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த உச்சிமாநாடு குறித்து "நல்ல எதிர்பார்ப்பு உணர்வு" இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வட கொரிய தலைவர் கிம், அணுஆயுதங்களை இந்த மாநாட்டின் இறுதியில் கைவிடுவார் என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்.
 
வட கொரியா கூறியது என்ன?
 
வட கொரியாவின் அரசு ஊடகம், பொதுவாக தலைவர்களின் செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிடாது. இந்த உச்சிமாநாடு குறித்த சிறு குறிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளது.
 
வட கொரிய தலைவர் கிம் சிங்கப்பூருக்கு சென்றதை உறுதி செய்துள்ள அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான ரொடொங் சின்மன் செய்தித்தாள், "புதிய சகாப்தத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, புதிய உறவினை உருவாக்குவோம்" என்று தன் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
 
கொரிய தீபகற்பத்தில் நிரந்தர மற்றும் அமைதியான ஆட்சியை ஏற்படுத்த மற்றும் அணுஆயுதங்களை கைவிடுதல் போன்ற விவகாரங்களுக்கு தீர்வு காண, "பரந்த மற்றும் ஆழமான கருத்துகள்" பரிமாறிக் கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த காலத்தில் எங்கள் நாட்டுடன் விரோத முறை இருந்திருந்தாலும், எங்கள் தன்னாட்சியை அமெரிக்கா மதித்து நடந்து கொண்டால்… பேச்சுவார்த்தைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம்" என்று அந்த செய்தி கூறுகிறது.
 
முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிக்கவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
 
''ஒட்டுமொத்த உலகமும் இதனை உற்று கவனித்து கொண்டிருக்கிறது'' என இந்த சந்திப்பு குறித்து கிம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 
வட கொரியா அணுஆயுதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. அதே வேளையில், இதற்கு பதிலாக அமெரிக்காவிடம் வட கொரியா எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
 
கிம் மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் சிங்கப்பூரில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கி இருந்த போதிலும், அவ்விரு இடங்களும் வெகு தொலைவில் இல்லை.
 
செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.
 
வட கொரியாவின் எதிர்பார்ப்பு என்ன?
 
வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு தலைவர்களும் ஒரு ''நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை'' குறித்து விவாதிப்பர் என்றும், கொரிய பிராந்தியத்தை ''அணுஆயுதமற்ற'' பிரதேசமாக மாற்றுவது, இருதரப்புக்கும் இடையேயான பரஸ்பர கவலைதரும் அம்சங்கள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
 
தற்போது இரு தரப்புக்கும் இடையேயான அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டதாக கேசிஎன்ஏ மேலும் கூறியுள்ளது.
 
முன்னதாக, இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
விமானத்தில் இருந்து டிரம்ப் இறங்கியவுடன் அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
 
இதனிடையே, வட கொரியாவின் வெளியுறவுதுறை அமைச்சர் , பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தனது சகோதரியான கிம்-யோ-ஜாங் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிம் சிங்கப்பூர் வந்தடைந்தார்.