ரஃபேல் நடால் - ஃபிரென்ச் ஓபன் : தொடரும் காதல்கதை

Last Modified திங்கள், 11 ஜூன் 2018 (14:31 IST)
பாரீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 10) நடந்த ஃபிரென்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆஸ்திரிய வீரரான டாமினிக் டீமை 6-4 6-3 6-2 என்ற நேர் செட்களில் வென்ற ரஃபேல் நடால் ,11-ஆவது முறையாக ஃபிரென்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

 
இறுதியாட்டம் தொடங்கியது முதல் ரஃபேல் நடால் ஆதிக்கம் செலுத்தி வந்தார். டாமினிக் டீமீன் சர்வீஸை பலமுறைகள் முறியடித்த நடால் இறுதி செட்டை மிகவும் 6-2 என்று வென்றார்.
 
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான ரஃபேல் நடால், இறுதியாட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டாலும் கடுமையாக போராடி வெற்றி பெற்றார்.
 
''டாமினிக் டீம் சிறப்பாக விளையாடினார். நான் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடினேன். பிரென்ச் ஓபன் பட்டத்தை 11முறை வெல்வது ஒரு கனவு போல் இருக்கிறது'' என்று வெற்றி பெற்ற நடால் குறிப்பிட்டார்.
 
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வென்ற 17-ஆவது பட்டம் இதுவாகும். அசாத்திய சாதனை புரிந்த நடாலின் சில சிறப்பம்சங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
 • இதற்கு முன்னர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரென்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் வென்றுள்ளார்.
   
 • ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அதிகமுறைகள் (11 முறைகள்) வென்ற மார்கரெட் கோர்ட்டின் சாதனையை நடால் சமன் செய்துள்ளார்.
   
 • தனது 17-ஆவது வயதில், அதாவது 2003-ஆம் ஆண்டிலேயே காயம் காரணமாக ஃபிரென்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இருந்து பங்கேற்காமல் விலகினார். மீண்டுமொரு முறை அவரால் ஃபிரென்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அனைத்து கேள்விகளையும் தகர்த்து தற்போது 11-ஆவது முறையாக ஃபிரென்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று நடால் சாதனை படைத்துள்ளார்.
   
 • தனது சகவீரர்களான பெடரர், ஜோகோவிச் போன்றவர்களை போல் சிறந்த 'சர்வ்' போடும் திறமை நடாலுக்கு இல்லையெனினும், ஓவ்வொரு பாயிண்டுக்கும் நடால் செலவழிக்கும் அசாத்திய உழைப்பு அவரது எதிராளிகளையும் வியக்க வைத்துள்ளது.
   
 • க்ளே கோர்ட் என்றழைக்கப்படும் களிமண் தரையில் நடாலின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். அதனால் அவர் 'க்ளே கிங்' என்றழைக்கப்படுகிறார்.
   
 • 18-ஆவது வயதில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நடால், 32-ஆவது வயதில் 17-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
   
 • காயம் காரணமாக, எண்ணற்ற மாதங்கள் நடால் விளையாடவில்லை. இனி நடால் அவ்வளவுதான்; முடிந்துவிட்டது அவரது விளையாட்டு சகாப்தம் என்று எண்ணற்ற முறைகள் விமர்சர்களால் முடித்து வைக்கப்பட்ட நடாலின் கதை மீண்டும் அவரது போராட்ட குணத்தால் தொடர் கதையாகி உள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :