ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (14:12 IST)

இலுமினாட்டிகளுடன் தொடர்பு: சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சி!

தாய்லாந்தில் இலுமினாட்டிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட எதிர்க்கட்சியை அந்நாட்டு நீதின்றம் விடுதலை செய்துள்ளது.
 
தாய்லாந்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவும், அந்நாட்டின் அரசாட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் இலுமினாட்டிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தாய்லாந்தின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஃப்யூச்சர் கட்சி மீது குற்றம்சாட்டு எழுந்தது. மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அந்த கட்சி மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
அந்த புகாரில்,`` ஃப்யூச்சர் கட்சியின் சின்னம், இலுமினாட்டிகளின் குறியீடு என கூறப்படும் தலைகீழ் முக்கோணத்தை ஒத்திருக்கிறது. மேலும் ஐரோப்பா முழுவதும் முடியாட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்கு வகித்த இலுமினாட்டிகள், தற்போது அதே வேலையை தாய்லாந்தில் செய்ய முயற்சிக்கின்றனர். அதற்கு ஃப்யூச்சர் கட்சி உறுதுணையாக இருக்கிறது. அந்த கட்சியின் நிறுவன தலைவரான தனதோர்ன் மற்றும் சில நிர்வாகிகள் முடியாட்சி எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர்.`` என தெரிவிக்கப்பட்டிந்தது.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த ஃப்யூச்சர் கட்சி, தாங்கள் முடியாட்சியை ஆதரிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. வழக்கை விசாரித்த தாய்லாந்து நீதிமன்றம், ஃப்யூச்சர் கட்சி அரசை கவிழ்க்க முயற்சி செய்யவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. ஒருவேளை இந்த வழக்கில் ப்யூச்சர் கட்சிக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தால், அந்த கட்சி தடை செய்யப்பட்டிருக்கும்.
 
ஆனாலும் பல்வேறு தாய்லாந்து நீதிமன்றங்களில் ப்யூச்சர் கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இலுமினாட்டி சர்ச்சையில் சிக்கிய ஃப்யூச்சர் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற தாய்லாந்து பொதுத்தேர்தலில் இளைஞர்களின் ஆதரவை பெருவாரியாக பெற்று மூன்றாம் இடம் பிடித்தது.
 
தாய்லாந்து நாட்டுக்கென அரசியலமைப்புச் சட்டம் இருந்தாலும், அந்த நாட்டின் அதிக சக்தி மற்றும் மதிப்பு வாய்ந்ததாக தாய்லாந்து அரச குடும்பமே கருதப்படுகிறது. எனவே அரச குடும்பத்தினரை யாராவது விமர்சித்தால், அவர்கள் கடுமையான சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.