அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!
மத்திய கிழக்கு போர் தற்போது காக்கசஸ் பிராந்தியத்திற்கும் பரவியுள்ளது. இன்று ஈரானிலிருந்து ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள், அஜர்பைஜானின் Nakhichevan பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ஒரு பள்ளிக்கு அருகில் விழுந்து வெடித்தன.
இந்த தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததுடன், விமான நிலைய முனையமும் சேதமடைந்தது. சர்வதேச சட்டங்களை மீறும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அஜர்பைஜான், பாகுவில் உள்ள ஈரானிய தூதரை நேரில் அழைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அஜர்பைஜான், தனது மண்ணை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் என்று தெஹ்ரான் நீண்டகாலமாக அஞ்சி வருகிறது. கடந்த ஜூன் மாதம் அஜர்பைஜான் அத்தகைய செயல்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என உறுதியளித்திருந்த போதிலும், தற்போது நிகழ்ந்துள்ள இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருத்தமான பதிலடி கொடுக்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்று அஜர்பைஜான் எச்சரித்துள்ளது. ஈரானில் உள்ள 10 மில்லியன் அஜர்பைஜான் சிறுபான்மையினரிடையே பிரிவினைவாத உணர்வை தூண்டக்கூடும் என்ற அச்சமும் ஈரானின் இந்த ஆக்ரோஷமான நகர்வுக்கு பின்னால் இருப்பதாக கருதப்படுகிறது.
Edited by Siva
