ஹுவவேய் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு

huawei
Last Modified செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:43 IST)
சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவவேய் நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை நிதி அலுவலர் மங் வான்ஜோ மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை.
 
உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஹுவவேய் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் வங்கி முறைகேடு, நீதியைத் தடுப்பது, தொழிநுட்பத் திருட்டு ஆகியவை அடங்கும்.
 
இந்த நடவடிக்கையால் சீனா- அமெரிக்கா இடையிலான பதற்றம் கூடுவதுடன், இந்நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்கள் தடைபடும்.
 
ஹுவவேய் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மங் வான்ஜோ-வும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
 
மங் இரான் மீதான தமது தடைகளை மீறியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதையடுத்து, அமெரிக்கா கேட்டுக்கொண்டதால், கடந்த மாதம் கனடா அவரைக் கைது செய்தது.
America
 
"பல ஆண்டுகளாக, சீன நிறுவனங்கள் எங்கள் ஏற்றுமதிச் சட்டங்களை உடைத்ததுடன், எங்கள் தடைகளையும் மீறி அமெரிக்க நிதியமைப்பை பயன்படுத்தி தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். இது அதற்கு முடிவாக இருக்கும்" என்று கூறியுள்ளார் அமெரிக்க வணிகத்துறை செயலாளர் வில்பர் ரோஸ்.
 
என்ன குற்றச்சாட்டுகள்? 
 
ஹுவவேய் டிவைஸ் யுஎஸ்ஏ மற்றும் ஸ்கைகாம் டெக் ஆகிய துணை நிறுவனங்களுடன் தமக்கு உள்ள உறவுகளைப் பற்றி அமெரிக்காவுக்கும், குளோபல் வங்கிக்கும் தவறான தகவல்களைத் தந்து இரானோடு வியாபாரம் செய்தது ஹுவவேய் என்பது அந்நிறுவனத்தின் மீது கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு.
 
2015-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட சில வளர்ந்த நாடுகள் இரானுடன் அணு உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டபோது, அமெரிக்கா கைவிட்ட இரான் மீதான தடைகள் அனைத்தையும், அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய சூழ்நிலையில் மீண்டும் விதித்தது அமெரிக்கா. அத்துடன், எண்ணெய் ஏற்றுமதி, கப்பல், வங்கிகள் தொடர்புடைய இன்னும் கடுமையான தடைகளையும் அமெரிக்கா விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
டி மொபைல் என்ற நிறுவனம் செல்பேசிகளின் நீடித்து உழைக்கும் திறனை சோதிக்கப் பயன்படுத்திய தொழில்நுட்பத்தை திருடியதாக மற்றொரு வழக்கும் ஹுவவேய் மீது தொடுக்கப்பட்டுள்ளது.
 
மொத்தத்தில் அந்நிறுவனத்தின் மீது 23 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
 
"இந்தக் குற்றச்சாட்டுகள், எங்கள் நாட்டின் சட்டங்களையும், உலக அளவில் தரப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகளையும் ஹுவவேய் துச்சமாக மதித்ததைக் காட்டுகின்றன. இதுபோன்ற நிறுவனங்கள் எங்கள் பொருளாதார மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்று தெரிவித்துள்ளார் எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரேய் தெரிவித்துள்ளார்.
Problem
 
ஹுவவேய், உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்புக் கருவிகள் உற்பத்தி மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்று. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தை முந்திச் சென்ற இந்த நிறுவனம் தற்போது உலக அளவில் சாம்சங்குக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய திறன் பேசி (ஸ்மார்ட்போன்) தயாரிப்பு நிறுவனமாக உள்ளது.
 
ஹுவவேயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமது உளவுத் திறனை சீனா அதிகரித்துக்கொள்ளும் என்ற கவலை அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் உள்ளது. ஆனால், தங்கள் நிறுவனத்தின் மீது சீன அரசுக் கட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மறுக்கிறது சீனா.
 
இந்நிலையில், ஹுவவேய் நிறுவனரின் மகளான மெங் கடந்த டிசம்பர்-1ம் தேதி, அமெரிக்க வேண்டுகோளின்படி கனடாவின் வான்கூவரில் கைது செய்யப்பட்டது சீனாவை கோபப்படுத்தியுள்ளது.
 
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறார். அத்துடன், கண்காணிப்பதற்கு வசதியாக அவர் ஒரு எலக்ட்ரானிக் பட்டை ஒன்றையும் காலில் கட்டியிருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :