வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (23:53 IST)

தைவான் வான் பரப்புக்குள் திடீரென பறந்த 25 சீன போர் விமானங்கள்

தங்களுடைய பாதுகாப்பு மண்டல வான் பரப்பில் திடீரென திங்கட்கிழமை 25 ஜெட் விமானங்கள் பறந்ததாக தைவான் தெரிவித்துள்ளது.
 
வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்துக்குள் அந்த விமானங்கள் பறந்ததாகவும், அவை அணு ஆற்றல் குண்டுகளை தாங்கிச் செல்லும் திறன் கொண்டதாகவும் இருந்தன என்று தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
தைவான் வான் பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் விமானங்களின் ஊடுருவல் நடப்பது, இந்த ஆண்டிலேயே இதுதான் அதிகம். அதுவும், சீனாவின் அளவுக்கு அதிகமான ஆக்கிரமிப்பு தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இது நடக்கிறது.
 
தைவானை எப்போதுமே தன்னிடம் இருந்து பிரிந்த மாகாணமாகவே சீனா பார்க்கிறது. எனினும், தன்னை இறையாண்மை மிக்க ஜனநாயக நாடாகவே தைவான் கருதுகிறது.
 
தைவான் வான் பரப்புக்குள் நுழைந்த நடவடிக்கையில், நான்கு அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் விமானங்கள், இரண்டு நீர் மூழ்கி கப்பல் எதிர்ப்பு விமானங்கள், ஒரு முன்னெச்சரிக்கை போர் விமானம் உள்பட சீனாவின் 18 ஜெட் விமானங்கள் ஈடுபட்டதாக தைவான் கூறுகிறது.
 
தங்களுடைய வான் பரப்பில் அளவுக்கு அதிகமான விமானங்கள் நுழைந்ததையடுத்து, ஒரு எச்சரிக்கை விமானத்தை அனுப்பி வைத்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. மேலும், சீன ஜெட் விமானங்களை கண்காணிக்க ஏவுகணை தாங்கி தளவாடங்கள் உஷார்படுத்தப்பட்டதாகவும் தைவான் தெரிவித்தது.
 
தைவான்
தைவானின் பரப்புக்குள் சீனா தனது விமானப்படை விமானங்களை அனுப்புவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு, தைவானின் தென் பகுதியிலும் தென் சீன கடல் பகுதியில் உள்ள தைவான் கட்டுப்படுத்தும் ப்ராடாஸ் தீவுகளிலும் போர் விமானங்களை சீனா அனுப்பியிருக்கிறது.
 
திங்கட்கிழமை ஊடுருவல் நடவடிக்கையின்போது ப்ரதாஸ் தீவுகளுக்கு தென் மேற்கே உள்ள அடிஸ் பகுதியை நோக்கியும் சீன போர் விமானங்கள் பறந்தன.
 
சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரிப்பது தங்களுக்கு கவலை தரும் நிகழ்வு என சமீபத்தில்தான் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக என்பிசி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், "தைவான் தன்னை தற்காத்துக் கொள்ளும் திறனுடன் இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தும். பலவந்தப்படுத்தி தைவானின் நிலையை மாற்ற எவர் முற்பட்டாலும், அது கடுமையான தவறாகலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு "போர் என்று பொருள்" - சீனா கடும் எச்சரிக்கை
’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா
சீனா - தைவான்: அடிப்படைகள் என்ன?
1949ஆம் ஆண்டில் சீன உள்நாட்டுப் போர் முடிந்தது முதல் சீனாவும், தைவானும் தனித்தனி ஆளுகைகளை கொண்டுள்ளன. தைவானின் சர்வதேச செயல்பாடுகளை கட்டுப்படுத்த சீனா நீண்ட காலமாகவே முயன்று வருகிறது. பசிஃபிக் பிராந்தியத்தில் அவை இரண்டுமே செல்வாக்கை கொண்டுள்ளன.
 
கடந்த சில ஆண்டுகளாகவே இரு தரப்பிலும் பதற்றம் தீவிரமாகி வரும் நிலையில், கட்டாயப்படுத்தி தைவானை கைப்பற்றும் நடவடிக்கையை சீனா மறுக்கவில்லை.
 
தைவான் ஆளுகையை சில நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதனுடனான வர்த்தகம் மற்றும் முறைப்படியான தொடர்புகளை அங்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டிருக்கிறது.
 
பல நாடுகளைப் போலவே, தைவானுடன் அமெரிக்காவுக்குராஜீய உறவுகள் எதுவும் அதிகாரபூர்வமாக இல்லை. ஆனால், தைவான் தன்னை தற்காத்துக் கொள்வதை உறுதிப்படுத்த அதற்கு தேவையான ஆதரவை வழங்கலாம் என அமெரிக்க சட்டம் வலியுறுத்துகிறது.