விஜய்யின் தஞ்சை கூட்டத்திற்கு அனுமதி? தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யாசாமிபட்டி பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவிலான தனியார் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த எட்டு சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தை நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி, தவெக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ஆர். விஜயசரவணன் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராமிடம் மனு அளித்துள்ளனர். கூட்டத்தில் சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும், அவர்களுக்கு கியூஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அனுமதி முறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில், தவெகவினர் தேர்வு செய்த இடத்தை ஆய்வு செய்த பின்னரே இறுதி அனுமதி குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சேலம், வேலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இத்தகைய சந்திப்புகளை விஜய் நடத்தியுள்ள நிலையில், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு முடிவடைந்தவுடன் தவெகவின் முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva