வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2019 (17:19 IST)

இது சோனிக் மாதிரியே இல்லை! புகாரால் படத்தையே மாற்றிய நிறுவனம்!

பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட படத்தின் மீது ரசிகர்கள் புகார் அளித்ததால் மொத்த படமுமே மாற்றப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஜப்பானிய கதாப்பாத்திரம் சோனிக் எனப்படும் முள்ளெலி. வீடியோ கேம், கார்ட்டூன் தொடராக வெளிவந்து ஹிட் அடித்த இந்த கதாப்பாத்திரத்தை வைத்து லைவ் ஆக்‌ஷன் படம் ஒன்றை எடுக்க ஹாலிவுட் பாரமவுண்ட் நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி அனைத்து பட வேலைகளையும் தொடங்கியது. இந்த செய்தி கேள்விப்பட்டதுமே ரசிகர்கள் சோனிக்கை திரையில் காண ஆரவாரமாய் தயாரானார்கள். அனைத்து பணிகளையும் முடித்த பாரமவுன்ட் கடந்த ஜூலை மாதம் சோனிக் படத்தின் முதல் ட்ரெய்லரை வெளியிட்டது. ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்த பாரமவுண்டுக்கு பலத்த அடி!

ரசிகர்கள் யாருக்கும் ட்ரெய்லரில் வந்த சோனிக்கை பிடிக்கவே இல்லை. கார்ட்டூனில் வெளியான சோனிக் போல இது இல்லை என புகார் அளித்தனர். இது தியேட்டரில் வெளியானால் பார்க்கவே மாட்டோம் என தயாரிப்பு நிறுவனத்தையும் திட்டி  சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

சரியாக இந்த நவம்பரில் படம் வெளியாவதாக அறிவித்திருந்த பட நிறுவனம் ரசிகர்களின் கோபத்தை கண்டு ரிலீஸை தள்ளி வைத்தது. மேலும் சோனிக் கதாப்பாத்திரத்தை மீண்டும் புதியதாக உருவாக்கி, சென்ற படத்தில் இல்லாத சோனிக்கின் உலகத்தை காட்டும் காட்சிகளையும் சேர்த்து படத்தை புதிதாக மீண்டும் உருவாக்கியுள்ளது.

இதன் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த ட்ரெயலரை பார்த்த ரசிகர்கள் “இந்த சோனிக்தான் நிஜமான சோனிக் போல உள்ளது” என பட நிறுவனத்துக்கு பாராட்டு கடிதம் வாசித்துள்ளார்கள். இந்த மறுதயாரிப்பு பணிகளால் படம் ரிலீஸ் தள்ளிபோய் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.

ரசிகர்களின் புகாரை ஏற்று ஒரு படத்தையே மாற்றியமைத்து எடுத்த சம்பவம் ஹாலிவுட் வட்டத்திலேயே மிகப்பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக ஹாலிவுட் ரசிகர்கள் சிலர் ”அங்கே எல்லாம் ரசிகர்களுக்காக படத்தையே மாற்றுகிறார்கள். இங்கே புகார் அளித்தாலும் அயர்ன் மேன் வாய்ஸை மாற்றவில்லை” என்று கூறி வருத்தப்பட்டுக் கொண்டார்களாம்!

அதிரடி புயல் வேக சோனிக்கின் அட்டகாசமான ட்ரெய்லர் இதோ..