ஈரான் மீது 2-வது நாளாக தாக்குதலை தொடங்கியது அமெரிக்க ராணுவம்! பங்குச்சந்தை இன்றும் ஆட்டம் காணுமா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா நடத்திய இந்த உக்கிரமான தாக்குதலில் ஈரானின் சிரிக், புஷெர், கொனாரக் மற்றும் சபஹர் ஆகிய முக்கிய பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஈரானின் ஷாஹர் நகரில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த அடுத்தடுத்த ராணுவ நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான போர்ச்சூழலை தீவிரமாக்கியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பெரும் தீ விபத்துகளும், பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளதால் அந்தப் பிராந்தியமே போர்க்களமாக மாறியுள்ளது. அடுத்தகட்டமாக ஈரான் இதற்கு என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறது என்ற அச்சம் சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது. மேலும் நேற்று இந்திய பங்குச்சந்தை மோசமாக சரிந்த நிலையில் இந்த தாக்குதலால் இன்று சரியும் என்று அஞ்சப்படுகிறது.
Edited by Siva
