மாஸ்டர் கார்டை தொடர்ந்து விசா கார்டு.. ஒரே இரவில் 2600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி அதிர்ச்சி..
உலகளாவிய முன்னணி நிதிச்சேவை நிறுவனமான விசா, தனது நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை தீவிரப்படுத்தும் நோக்கில், உலகளவில் சுமார் 2,600 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. இந்த அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் தொழில்நுட்ப மையங்களான பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள விசா மையங்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 29 அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி மின்னஞ்சல்கள் மூலம் இந்த பணிநீக்க தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் சீனியர் டைரக்டர்கள், என்ஜினீயரிங் மேனேஜர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஊழியர்கள் கொண்ட ஒரு குழுவில் 10 பேர் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரியான் மெக்கினர்னி கூறுகையில், மனித மேற்பார்வையுடன் தாமாகவே செயல்படும் 'ஏஜென்டிக் ஏஐ' தொழில்நுட்பத்தை நோக்கி விசா நகர்வதாகவும், இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வர்த்தக சரிவால் அல்லாமல், வணிக லாபத்திலும் எதிர்காலத் தொழில்முறை மாற்றத்தைக் கருத்தில் கொண்டே விசா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மாஸ்டர்கார்டு, அமேசான் மற்றும் பிளாக் போன்ற பிற முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து, விசாவின் இந்த நடவடிக்கை இந்தியத் தொழில்நுட்பத் துறையில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
Edited by Siva
