வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (15:09 IST)

இனி இந்தியாவுக்கு ஆசிய கோப்பையில் என்ன வேலை??

இனி இந்தியாவுக்கு ஆசிய கோப்பையில் என்ன வாய்ப்பு என தெரிந்துக்கொள்ளுங்கள்…


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்திய அணி நேற்று இரண்டாவது போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 72 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது எனவே கூறலாம். ஆனால் இனி இந்தியாவுக்கு ஆசிய கோப்பையில் என்ன வாய்ப்பு என தெரிந்துக்கொள்ளுங்கள்…

சூப்பர் 4 சுற்றில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள்தான் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும். அந்த வகையில் அடுத்த நடைபெறக் கூடிய மூன்று போட்டிகளின் முடிவைப் பொறுத்து இந்திய அணிக்கு அந்த சொற்பமான வாய்ப்புக் கிடைக்கக்கூடும்.

அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்படியில்லாமல் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

ஒருவேளை பாகிஸ்தான் அணி தோற்றாலும் அடுத்து நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் அது மட்டும் போதாது. கடைசியாக நடைபெறும் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால்தான் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும்.

ஒருவேளை அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தானும் இலங்கையும் இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடும். அதாவது அடுத்து வரக்கூடிய ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்க வேண்டும். இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருப்பதால் இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.