இன்று மெல்போர்னில் வாழ்வா சாவா போட்டி – ஆஸி எடுத்த அதிரடி முடிவு…

Last Modified வெள்ளி, 18 ஜனவரி 2019 (07:10 IST)
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற இருக்கிறது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டி 20 தொடர் டிராவிலும், டெஸ்ட் தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளன. அதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த 2 ஆட்டங்களில் இந்தியா ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனால் இன்று தொடங்கவுள்ள மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவாப் போட்டியாக இருக்கும். தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.


இந்திய அணி டெஸ்ட் தொடரோடு ஒருநாள் தொடரையும் வென்று வெற்றியோடு மூன்று மாத சுற்றுப்பயணத்தை முடிக்கும் முனைப்பில் உள்ளது. அதனால் இறு நடைபெற இருக்கும் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்திய அணியின் பேட்டிங்கில் ரோஹித், கோஹ்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தோனி 13 மாதங்களுக்கு பிறகு அரைசதமடித்து மீண்டும் தனது இயல்பான ஆட்டத்திறனுக்கு வந்துள்ளார். இதனால் இந்தியாவின் பேட்டிங் பலமாக உள்ளது. போலவே பவுலிங்லில் முதல் மேட்சில் குல்தீப் யாதவ்வும் இரண்டாவது மேட்சில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் இந்திய அணி மாற்றங்களின்றி இந்த போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரண்டோர்ஃப்புக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவும், வேகப்பந்துவீச்சாளர் பில்லி ஸ்டான்லேக்கும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 இதில் மேலும் படிக்கவும் :