கோஹ்லி சதம்; தோனி, தினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றி வாகை சூடியது இந்தியா !
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான இருபது ஓவர் போட்டித் தொடர் சமனிலும் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்றக் கணக்கிலும் வென்றுள்ளது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 12 ஆம் தொடங்கியது.
12 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதையடுத்து இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஷான் மார்ஷின்(133) அதிரடி சதத்தால் வலுவான ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (48) மற்றும் ஸ்டாய்னிஸ் (29) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் ஆஸி ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
அதையடுத்து 299 ரன்கள் என்ற கடின இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித்தும் தவானும் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் (43) மற்றும் தவான் (32) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ராயுடு மற்றும் தோனியோடு ஜோடி சேர்ந்தார் கோஹ்லி. சிறப்பாக விளையாடிய கோஹ்லி தனது 39 சதத்தை நிறைவு செய்தார். கோஹ்லி சேஸிங்கின் போது அடிக்கும் 24 ஆவது சதம் இதுவாகும். சதமடித்த கோஹ்லி 104 ரன்களில் ரிச்சட்ர்ஸன் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் வெற்றிக் கேள்விக்குறியானது.
அதனையடுத்து தோனியுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். அதுவரை ஆமை வேகத்தில் விளையாடிய தோனியும் அதன் பின்னர் சுறுசுறுப்பாக விளையாட ஆரம்பித்தார். இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. சிறப்பாக விளையாடிய தோனி அரைசதம் அடித்தார்.
தோனி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் இந்தியா 4 பந்துகள் மீதமிருக்க இலக்கான 299 ரன்களைக் கடந்து 6 விக்கெட் வெற்றி பெற்றது. தோனி 54 பந்துகளில் 55 ரன்களும் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 25 ரன்களும் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்தனர். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.