புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (12:58 IST)

மனைவியோடு சண்டை - திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலை செய்து கொண்ட ராணுவவீரர்

வேலூர் அருகே திருமணமாகி ஒரு மாத காலமே ஆகியிருந்த நிலையில் மனைவியோடு ஏற்பட்ட சண்டையால் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூருக்கு அருகே உள்ள கணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவர் கடந்த மாதம் விடுமுறையில் தனது ஊருக்கு வந்திருக்கிறார். அவரது பெற்றோர்கள் அவருக்கு புவனேஷ்வரி என்ற பெண்ணை பார்த்து மணம் முடித்து வைத்திருக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மகேஷ் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு மேம்பாலம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிபோக தன்னிலை மறந்த மகேஷ் கோபத்தில் மேம்பாலத்திலிருந்து திடீரென குதித்துவிட்டார். கீழே விழுந்து இறந்து கிடந்த தனது கணவரின் சடலத்தை கண்டு கதறி அழுதுள்ளார் புவனேஷ்வரி.

மகேஷின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.