நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?
எகிப்து நாட்டில் நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. மீட்பு படையினர் நேரில் சென்று சுற்றுலா பயணிகளை மீட்க போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள செங்கடலில் ஒரு நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் 44 பயணிகளை ஏற்றி கிளம்புவதற்கு தயாராக இருந்த நிலையில், திடீரென அந்த கப்பல் கவிழத் தொடங்கியது. இதனை அடுத்து உடனடியாக மீட்பு படையினர், கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகளை காப்பாற்ற முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 29 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த ஒன்பது பேரில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
'சிந்துபாத்' என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நீர்மூழ்கி கப்பல் 82 அடி ஆழத்தில் சென்று கடலுக்கடியில் உள்ள பவளப் பாறைகள் மற்றும் கடல்சார் உயிரினங்களை சுற்றுலா பயணிகள் காணும் வகையில் இது செயல்பட்டு வந்தது.
கடலுக்கடியில் 40 நிமிடங்கள் பயணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த 'சிந்துபாத்' நீர்மூழ்கிக் கப்பலில் சென்றிருந்தனர். 44 பேர் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த படகு தற்போது முழுக்க மூழ்கியதால், சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Edited by Mahendran