பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலக வேண்டும், இல்லையெனில் அவர் எதிர்கொள்ளும் நிலைமை கடுமையாக இருக்கும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தற்போது பிரிந்துள்ள நிலையில், மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என நபிகள் நாயகத்திடம் வேண்டுதல் வைக்கிறேன் என்றும் கண்டிப்பாக அது நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
"பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேர வேண்டும் என மறைந்த கருப்பசாமி பாண்டியன் நினைத்திருந்தார். அவரது ஆத்மா சாந்தியடைய, நாம் கண்டிப்பாக அதிமுகவை ஒருங்கிணைப்போம்," என அவர் கூறினார்.
ஒரே தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று பழனிசாமி கூறினார், ஆனால் இதுவரை ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. எனவே, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவராகவே விலகுவது அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லையெனில், அவர் அவமரியாதையை சந்திக்க நேரிடும்," என ஓ. பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Edited by Mahendran