புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (12:33 IST)

நூல் இழையில் கிடைத்த வெற்றி – தீவிர களப்பணிக்கு தயாராகும் திமுக

வேலூரில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக வெற்றி பெற்றிருப்பதால் அதிமுக வளர்ந்து வருகிறதோ என்ற சந்தேகம் திமுக மேலிடத்தை ஆட்டிவைக்கிறது.

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கட்சி வேட்பாளர் கதிர் ஆனந்த் 8414 வாக்குகள் வித்தியசத்தில் அதிமுகவை வென்றார். வாக்கு எண்ணிக்கையில் இது மிகவும் சொற்பமான எண்ணிக்கை ஆகும். கொஞ்சம் தவறியிருந்தாலும் வெற்றி வாய்ப்பு அதிமுகவிற்கு சென்றிருக்கும்.

திமுக வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. முக்கியமாக ஆம்பூர் தொகுதிகளில் உள்ள சிறுபான்மையினரான் இஸ்லாமியர்களின் ஆதரவு திமுகவுக்கு இருந்ததால் இந்த வெற்றி வாய்ப்பு திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. அதுவும் அதிமுகவின் கூட்டணி பாஜகவோடு இருந்ததால் அதை எதிர்ப்பதற்காக அவர்கள் திமுகவிற்கு வாக்களித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதிலுமே மோடி எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருந்ததால் மக்கள் திமுகவிற்கு ஆதரவு அளித்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் மக்களவை தேர்தல் முடிவுகளின்போதே கருத்து தெரிவித்தனர். எனவே மோடி எதிர்ப்பு அலையை விடுத்து திமுக ஈர்ப்பு அலையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

களப்பணிகளின் மூலம் மாவட்ட ரீதியாக கட்சியை பலப்படுத்த முடிவதுடன், ஆட்சியமைக்கவும் அது உதவும். எனவே திமுக மாவட்ட நிர்வாகிகள் மூலம் மாவட்டரீதியான பிரச்சினைகளை ஆராய்ந்து அதை தேர்தல் அறிக்கையுடன் இணைப்பதற்கான பணிகளை இப்போதிருந்தே திமுக தொடங்கபோவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிமுக அடுத்து கட்ட நகர்வு என்ன என்பதையும் கவனித்து வருகிறார்களாம்.