புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (10:02 IST)

ஒரே நாளில் 12 அடி உயர்ந்த நீர்மட்டம் – தமிழக மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்ததால் கரையோரப்பகுதியில் இருக்கும் ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 124 அடி உயரம் கொண்ட கே.எஸ்.ஆர் அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதேபோல கபினி அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் கொள்ளளவை நெருங்கிவிட்டதால் அதிலிருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டு இருக்கிறது. தற்போது இரண்டு அணைகளிலிருந்தும் காவிரிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கர்நாடக-தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 67.40 அடியை எட்டியுள்ளது. ஓகனேக்கல் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் குளிக்கும் அருவிகள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் நுழைவாயில்களை போலீஸார் மூடி சீல் வைத்துள்ளனர்.

ஓகனேக்கல் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.