புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (11:48 IST)

தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் – நோயாளிகள் கதி என்ன?

மேற்கு வங்கத்தில் கடந்த 10ம் தேதி அன்று முதியவர் ஒருவர் இறந்ததற்கு டாக்டர்களை உறவினர்கள் தாக்கியதை கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் தொடங்கியது. இன்று அது தேசிய அளவில் நடக்கிறது. தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் உயிரிழந்தார். அதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என சொல்லி இறந்தவரது உறவினர்கள் சிலர் இளநிலை மருத்துவர்கள் இருவரை தாக்கியுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து 6 நாட்களாக மேற்கு வங்க மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்திய அளவில் இதற்கான வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள பல தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டம் நாளை காலை 6 மணிவரை இந்தியாவெங்கும் நடக்கிறது.

அவசர சிகிச்சைகள், விபத்துக்கான சிகிச்சைகள் தவிர புறநோயாளிகள் சிகிச்சை போன்றவை நடைபெறாது என மருத்துவர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவர்களை அழைத்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய இந்த போராட்டத்தால் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பலர் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.