வெயிலுக்கு இதமா தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
இந்நிலையில் மன்னர் வளைகுடா, தமிழ்நாட்டின் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
